Published : 05 May 2016 08:44 AM
Last Updated : 05 May 2016 08:44 AM

ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம்: 9 முறை திமுக, 3 முறை அதிமுக வென்ற தொகுதி

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் வசிக்கின்றனர். முதல் அமைச்சர் ஜெயலலிதா (போயஸ் கார்டன்), திமுக தலைவர் கருணாநிதி (கோபாலபுரம்), முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் (பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை), நடிகர்கள் ரஜினிகாந்த் (போயஸ் கார்டன்), கார்த்திக் (ஆழ்வார்பேட்டை), பிரபு (தி.நகர்), ராதாரவி (ஆழ்வார்பேட்டை) என பல பிரபலங்கள் வசிக்கும் தொகுதி.

மேலும், அமெரிக்க துணை தூதரகம், வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், பிரபல மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த தொகுதி. சென்னை மாநக ராட்சியின் 76, 77, 78, 109, 110, 111, 112, 113, 117, 118 ஆகிய வார்டுகள் இந்த தொகுதிக்குள் அடங்கும். இந்த தொகுதியில் திமுக 9 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் இந்த தொகுதியில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம்

போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு, கொசுத் தொல்லை ஆகிய மூன்றும் இங்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. அனைத்து சமூக மக்களும் இங்கு வசித்தாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் 40 சதவீதம் பேர் இந்த தொகுதியில் உள்ளனர்.

2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி 67,522 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளராக போட்டியிட்ட அசன் முகமது ஜின்னா தோல்வி அடைந்தார். இத்தொகுதியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 944 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 23 ஆயிரத்து 364 பெண் வாக்காளர்கள், 78 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 386 வாக்காளர்கள் உள்ளனர்.

22 பேர் போட்டி

2016 சட்டப்பேரவை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.வளர்மதி (அதிமுக), கு.க.செல்வம் (திமுக), வி.ரங்கன் (பாமக), சி.அம்பிகாபதி (மதிமுக), சிவலிங்கம் (பாஜக), முருகேசன் (நாம் தமிழர் கட்சி), எம்.இளங்கோ (இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கட்சி) உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 7 பேர் மற்றும் 15 சுயேச்சைகள் உட்பட 22 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக - பா.வளர்மதி

நேற்று காலையில் வடக்கு உஸ்மான் சாலை, ஹபிபுல்லா சாலை பகுதியில் பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி 'தி இந்து’விடம் கூறும்போது, “ஆயிரம் விளக்கு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.284 கோடி செலவில் நலப்பணிகளை செய்திருக்கிறேன். 118-வது வார்டில் ரூ.11 கோடி செலவில் துணை மின் நிலையம், சாலை வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதா செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்கிறேன். நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்” என்றார்.

திமுக - கு.க.செல்வம்

திமுக வேட்பாளர் கு.க.செல்வம் தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில், தாமஸ் சாலை பகுதியில் நேற்று காலையில் பிரச்சாரம் செய்தார். அவர் கூறும்போது, “திமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி வாக்கு சேகரித்து வருகிறேன். நான் இந்த பகுதி மக்களுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறேன். இவற்றைக் கூறி வாக்கு சேகரிக்கிறேன்” என்றார்.

பாமக - வி.ரங்கன்

பாமக வேட்பாளர் வி.ரங்கன் தி.நகர் திலக் தெருவில் நேற்று காலையில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அவர், “ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரபலங்கள் வசிப்பது மட்டுமே அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் சென்னை நகருக்குள் இருக்கும் இந்த தொகுதியில் 50 சதவீதம் பேர் ஏழைகளாகவும், சேரி மற்றும் குடிசை மாற்று வாரியத்தில் வசிப்பவர்களாகவும் உள்ளனர். கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதிக்கு சென்றபோது சாக்கடை வசதி இல்லாததை கூறி, எங்களுக்கு உள்ளே செல்ல தடை விதித்தனர். நான் பாமக கட்சியில் இருந்து வருகிறேன். நிச்சயமாக நீங்கள் விரும்பும் மாற்றத்தை நான் கொண்டு வருவேன் என்று உறுதி கூறினேன். அதன் பின்னரே உள்ளே அனுமதித்தனர்” என்றார்.

பாஜக - சிவலிங்கம்

பாஜக வேட்பாளர் சிவலிங்கம் சூளைமேடு அண்ணா நெடும் பாதையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அவர் கூறும் போது, “ஆயிரம் விளக்கில் பெரும் பாலான வார்டுகளில் குடி தண்ணீர் வசதி, சாலை வசதி இல்லை. 109, 117 வார்டுகளில் ரேஷன் கடை வசதிகள் இல்லை. ஜி.என்.செட்டி சாலை பாலமந்திர் பள்ளி அருகே சுரங்கப்பாதை வசதி இல்லாத தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு கின்றன. நான் எம்எல்ஏவானால் இந்த பிரச்சினைகள் அனைத் துக்கும் உடனடி நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

நாம் தமிழர் கட்சி - முருகேசன்

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் முருகேசன் சூளைமேடு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் நிலையையும் கூறி, அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை கூறியே அனைவரிடமும் அவர் வாக்கு சேகரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x