

வேலூர்: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக காட்பாடி தாராபட வேடு மற்றும் பழைய காட்பாடி பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த மாற்றுப்பாதையை சீர்படுத்தியதுடன் விரைவில் ரூ.2.94 கோடியில் தாற்காலிக சாலை அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத் துள்ளனர்.
சித்தூர்-கடலூர் சாலையின் பிரதான பாலமாக இருந்து வரும் காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிக்காக கடந்த 1-ம் தேதி முதல் போக்குவரத்துக்கு மூடப்பட்டது. இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மற்றும் வேலூர் வழியாக அண்டை மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டுள்ளனர். இதன் காரணமாக, இரு சக்கர மற்றும் கார், ஆட்டோ உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் கிளித்தான்பட்டறை அருகேயுள்ள ரயில்வே தரைப்பாலத்தின் வழியாக அருப்புமேடு மற்றும் ஓடைபிள்ளையார் கோயில் சந்திப்பை அடையவும், மற்றொரு பாதையாக வள்ளிமலை கூட்டுச்சாலை சந்திப்பில் இருந்து பி.சி.கே நகர் அருகில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தின் வழியாக பழைய காட்பாடியை அடையவும் மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டன.
இந்த இரண்டு மாற்றுப்பாதை யும் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத மோசமான நிலையில் இருந்தன. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் மின் விளக்கு வெளிச்சமும் இல்லாமல் பெண்கள், குழந்தைளுடன் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, தாராபடவேடு தமிழ்நாடு குடியி ருப்பு வாரியம் வழியாக செல்லும் சாலையில் பாதாள சாக்கடை திட்ட குழாயின் பள்ளம் மூடப்படாமல் ஆபத்தாக இருப்பதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று படங்களுடன் செய்தி வெளியானது.
இந்நிலையில், தாராபடவேடு தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் வழியாகச் செல்லும் குண்டும் குழியுமான சாலையை ‘பொக்லைன்’ இயந்திரத்தின் உதவியுடன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று சரி செய்யப்பட்டது. மேலும், ஆபத்தான நிலையில் இருந்த பாதாள சாக்கடை குழாய் பள்ளத்தின் மீது சிமென்ட் மூடியை போட்டு மூடினர்.
இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘பாலம் சீரமைப்புக்காக பயன்படுத்தப்படும் மாற்றுப்பாதையில் தற்காலிக சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக அருப்புமேடு, ஹவுசிங் போர்டு பகுதி சாலை சீரமைப்பு பணிகள் ரூ.2.40 கோடியில், பழைய காட்பாடி சாலை சீரமைப்பு பணிகள் ரூ.54 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். தற்காலிக சாலையில் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத் தப்படும்’’ என்றார்.