Published : 03 Jun 2022 06:39 PM
Last Updated : 03 Jun 2022 06:39 PM

பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்து: ஓபிஎஸ்

சென்னை: "முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். பாஜகவின் வி.பி. துரைசாமி அதிமுகவுக்கு சான்றளிக்க வேண்டிய அவசியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது: " கடந்த 29 மற்றும் 30-ம் தேதி நடைபெற்ற, அதிமுகவின் அம்மா பேரவை சார்பில் நடந்த திறன் மேம்பாடு கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசிய கருத்து, அவரது சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது: அதிமுக தலைமைக் கழகத்தால் மாநிலங்களவைத் தேர்தலுக்கான இரு வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருவரது வெற்றிக்கு துணை நின்ற, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதிமுக சட்டப்பேரவையில் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியும். எனவே பாஜகவின் வி.பி. துரைசாமி அதிமுகவுக்கு சான்றளிக்க வேண்டிய அவசியமில்லை.

நாட்டு மக்களுக்கு எங்களைப் பற்றித் தெரியும். நாட்டு மக்களின் பிரச்சினைகளை எந்தளவுக்கு புள்ளி விவரத்தோடு நானும், ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தெரிவித்து வருகிறோம். அதோடு பாஜகவைச் சேர்ந்தவர் எப்படி பேசுகிறார் என்பது நாட்டு மக்களுக்கும் தெரியும்.

தமிழக முதல்வர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த பிறகு, திருச்சி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். அன்றைய தினமே சென்னையில் ரவுடிகளின் அட்டகாசம். இது பத்திரிகையிலும், ஊடகங்களிலும் வந்துள்ளது. அதோடு, மதுரை உயர் நீதிமன்ற கிளை, போலீஸாரின் ஒத்துழைப்புடன்தான் குற்றவாளிகள் தலைமறைவாகின்றனர் என்ற கருத்தையும் சொல்லியுள்ளது. அந்தளவுக்குத்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, தினந்தோறும் கொலை நடக்காத நாட்களே கிடையாது. அதேபோல், வழிப்பறி, திருட்டு, கட்டப்பஞ்சாயத்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் மட்டும், ஏராளமான கொலைகள், திருட்டு, செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதையெல்லாம் இந்த அரசு தட்டிக்கேட்க அருகதையில்லாத அரசாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெறுகிறது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காவல்துறையை கையில் வைத்திருக்கின்ற முதல்வர் ஸ்டாலின் இதனை முறையாக கவனிக்காததால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சீரழிந்து சந்தி சிரிக்கின்ற நிலைக்கு வந்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x