

தமிழகத்தில் சாலை விபத்துகளில் கார், பைக், லாரி, பஸ் ஆகிய வாகனங்களில் சென்று இறப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால், சைக்கிள் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி மரணம் அடைந்தவர்களும் அதிகம் என்பது உங்களுக்கு வியப்பூட்டும் தகவலாக இருக்கலாம். ஆனால், அதுவும் உண்மையே.
குறிப்பாக, சாலைகளில் சைக்கிள் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி அதிகம் பேர் மரணம் அடையும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா? ஆனால், இதுதான் உண்மை. இதை நான் கூறவில்லை. மத்திய குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள்ளது. 2020-ம் ஆண்டு நாடு முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துகள் தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
மத்திய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின் அடிப்படையில் 2020-ம் ஆண்டு நாடு முழுவதும் சாலை விபத்துகளில் சிக்கி 2,050 சைக்கிள் ஓட்டிகள் மரணம் அடைந்துள்ளனர். இதில், தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 303 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் 189 பேரும், பஞ்சாப்பில் 172 பேரும், அசாமில் 151 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.
இதைப்போன்று கடந்த 2019-ம் ஆண்டு இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் சிக்கி 1,970 சைக்கிள் ஓட்டிகள் மரணம் அடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 230 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் 216 பேரும், மகாராஷ்டிராவில் 162 பேரும், பிஹாரில் 159 பேரும், பஞ்சாப்பில் 145 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.
2020-ம் ஆண்டு பெருநகரங்களில் சென்னையில்தான் அதிகம் பேர் மரணம் அடைந்துள்ளனர். சென்னையில் 37 பேரும், ஃபரிதாபாத்தில் 17 பேரும், அகமதாபாத்தில் 15 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.
2019-ம் ஆண்டும் பெருநகரங்களில் சென்னையில்தான் அதிகம் பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்படி, சென்னையில் 43 சைக்கிள் ஓட்டிகள் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஜாம்பூரில் 24 பேர், அசன்சோலில் 19 பேர், பரிதாபாத்தில் 17 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து கோவை, மதுரை உள்ளிட்ட நகங்களில் தனி சைக்கிள் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சைக்கிள் பாதைகள் பெரும்பாலும் சாலைகளின் ஓர் ஓரத்தில் கோடு போட்டு அமைக்கப்படுகிறது. இதனால் சைக்கிள் ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் அதிக அளவு இப்போது சைக்கிள் ஓட்ட தொடங்கி உள்ளனர். பலரும் உடற்பயிற்சிக்காகவும், அருகில் உள்ள இடங்களுக்கு செல்லவும் தற்போது சைக்கிளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மிகக் குறிப்பாக, பள்ளி மாணவர்களின் சைக்கிள் பயன்பாடும் உயர்ந்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் உள்ள சாலைகள் சைக்கிள் ஓட்டிகளுக்கு ஏற்றதா என்பது கேள்விகுறியாகதான் உள்ளது. இதை மேற்கண்ட விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கையே உறுதிப்படுத்துகிறது. எனவே, மற்ற வாகனங்கள் செல்லும் சாலையில் ஓரத்தில் சைக்கிள் பாதை அமைக்காமல், இனிமேல் புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் ஓரத்தில் இல்லாமல் தனியாக சைக்கிள் பாதை அமைத்தால் மட்டுமே இதுபோன்ற விபத்துகளை தடுக்க முடியும்.