Published : 03 Jun 2022 02:29 PM
Last Updated : 03 Jun 2022 02:29 PM

“இன்று கட்சி தொடங்குவோர் எல்லாம் ‘நாளை நான்தான் முதல்வர்’ என்று கூறிக் கொள்கின்றனர்” - மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடமணிந்த குழந்தைகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "தமிழகத்தில் இன்று கட்சித் தொடங்குகிறவர்கள் எல்லாம், அடுத்து நான்தான் முதல்வர் என்றுக் கூறிக் கொண்டு கட்சி தொடங்குகின்றனர்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி, திமுக தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியது: "முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பெயருக்காக கொண்டாடப்படும் விழா அல்ல. அவர் முதல்வராக இருந்தாலும், எதிர்கட்சித் தலைவராக இருந்தாலும், அவருடைய பிறந்தநாள் நாட்டு மக்களுக்காக கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு பிறந்தநாளையும் மறைந்த முதல்வர் கருணாநிதி மக்களுக்காக பயன்படுத்தினார். இன்று கை ரிக்ஷாக்களை எங்கேயுமே பார்க்க முடியாது. கம்யூனிச சித்தாந்தத்தைப் பேசிக்கொண்டிருக்கிற மேற்கு வங்கத்தில்கூட கை ரிக்ஷாக்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் கை ரிக்ஷாக்கள் இல்லை என்றால், அதற்கு காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான்.

தன்னுடைய பிறந்தநாளை தனக்காக கொண்டாடமல், நாட்டு மக்களுக்காக, ஏழை - எளியவர்களுக்காக கொண்டாடிய தலைவர்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

1949-ல் திமுக தொடங்கப்பட்டது. கட்சியைத் தொடங்கும்போதே நான்தான் முதல்வர் என்றுகூறிக் கொண்டு வரவில்லை பேரறிஞர் அண்ணா. ஆனால், இன்று கட்சித் தொடங்குகிறவர்கள் எல்லாம், அடுத்து நான்தான் முதல்வர் என்றுக் கூறிக் கொண்டு கட்சி தொடங்குவதை பார்க்கிறோம்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x