Published : 03 Jun 2022 12:56 PM
Last Updated : 03 Jun 2022 12:56 PM

கனவு இல்லம் | எழுத்தாளர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 3) வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கனவு இல்லத் திட்டத்தின் கீழ், தமிழ் மொழியில் வெளியான தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருது, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகிய விருதுகளை பெற்ற ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு என்கிற சு.ஜகன்னாதன், முனைவர் இ.சுந்தரமூர்த்தி, பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம், முனைவர் கு.மோகனராசு, இமையம் என்கிற வெ.அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 3.6.2021 அன்று, "தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசு மூலமாக வீடு வழங்கப்படும்" என்று கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று கனவு இல்லத் திட்டத்தின் கீழ், 2004-ஆம் ஆண்டு "வணக்கம் வள்ளுவ" எனும் கவிதை நூலிற்காக சாகத்திய அகாதமி விருது மற்றும் 2018-ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினையும் பெற்ற ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பனுக்கு சென்னை, திருமங்கலம், தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு கிராமக் கோட்டம், 304 உயர் வருவாய்ப் பிரிவு முதல் தளம் அடுக்குமாடி குடியிருப்பு எண்.சி2/235 இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டில் "கையொப்பம்" எனும் கவிதை நூலிற்காக சாகத்திய அகாதமி விருது பெற்ற கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதனுக்கு கோவை வீட்டுவசதி பிரிவு – கணபதி திட்டப்பகுதி 48, உயர் வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு எண்.1 இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 2012-ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் இ. சுந்தரமூர்த்திக்கு சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில், கோயம்பேடு திட்டப்பகுதி 304 உயர் வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்பு எண்.சி2/231இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு ஆண்டு "அஞ்ஞாடி" எனும் புதினத்திற்காக சாகத்திய அகாதமி விருது பெற்ற பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகத்துக்கு சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில், கோயம்பேடு திட்டப்பகுதி 304 உயர் வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்பு எண்.பி1/3இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 2014-ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் கு. மோகனராசுவுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அண்ணாநகர் சாந்தி காலனி நடுவாங்கரை திட்டம், 16 உயர் வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு எண்.474/1 இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு "செல்லாத பணம்" எனும் புதினத்திற்காக சாகத்திய அகாதமி விருது பெற்ற இமையம் என்கிற வெ. அண்ணாமலைக்கு சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில் 304 உயர் வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்பு எண்.பி1/65இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழக முதல்வர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x