Published : 03 Jun 2022 10:47 AM
Last Updated : 03 Jun 2022 10:47 AM

ஆன்லைன் விளையாட்டு, மறைமுக லாட்டரி விற்பனையை தடை செய்க: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்

சென்னை: ஆன்லைன் விளையாட்டு மறைமுக லாட்டரி விற்பனை போன்ற சூதாட்டங்களை தடை செய்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர் செய்ய வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இணையதள விளையாட்டு என்று கூறி, பொது மக்களை ஏமாற்றி, பணம் கட்ட வைத்து, பிறகு பந்தயமாக மாற்றி, தொடர்ந்து விளையாடச் செய்து சூதாட்டத்திற்கு அடிமையாக்கக் கூடியதாகவும்; விபரீத விளைவுகளை உருவாக்கக் கூடியதாகவும்; உயிருக்கே ஆபத்தினை ஏற்படுத்தக் கூடியதாகவும் ஆன்லைன் விளையாட்டுகள் விளங்குகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்துமே ஒரு விதமான சூதாட்டம் தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

சூதாட்டம் என்பது ஒரு போதைப் பொருள். இதன் காரணமாக பல குடும்பங்கள் நடுத் தெருவிற்கு வந்ததைக் கண்ட ஜெயலலிதா 2003ம் ஆண்டு லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடை விதித்தார்கள். இன்றும் இந்தத் தடை நடைமுறையில் உள்ளது. இருந்தாலும், இந்தத் தொழில் முழு வீச்சில் நடப்பதாகவும், இதன் பின்னணியில் மிகப் பெரிய முக்கியப் புள்ளிகள் இருக்கிறார்கள் என்றும், காவல் துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆன்லைன் விளையாட்டுகள் கொடிகட்டி பறக்கின்றன. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென நானும் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.முதல்வரும் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத் தெரிவித்து இருந்தார்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இது கடும் கண்டனத்திற்குரியது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பல கொலைகளும், தற்கொலைகளும் நிகழ்கின்றன. சென்னை, பெருங்குடி, பெரியார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த திரு. மணிகண்டன் என்பவர் ஆன்லைன் விளையாட்டு காரணமாக ஒரு கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து, குடும்பத்தில் சண்டை ஏற்பட்டதன் காரணமாக குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு, தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார்.

இதேபோன்று, சிவகங்கை மாவட்டம், சங்கரன்கோயில் பகுதியை சேர்ந்தவரும், அம்பத்தூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தவருமான சரவணகுமார் என்பவர் ஆன்லைன் விளையாட்டில் அதிகமாக பணத்தை இழந்ததன் காரணமாக, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது தன்னிடம் உள்ள துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபோல், பல கொலைகளும், தற்கொலைகளும் நடைபெறுகின்றன. பலர் லட்சக் கணக்கில் பணத்தை இழந்து செய்வதறியாது திகைக் கின்றனர். இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டாலும், அதற்கு எதிராக தனியரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சட்டத்தினை ரத்து செய்து உத்தரவிட்டது. அதே சமயத்தில், தன்மைக்கேற்ப பந்தயம் மற்றும் சூதாட்டம் குறித்து உரிய சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அறிகிறேன்.

இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு வாயிலாக மோசடி நடப்பதாகவும், முதலில் ஆசையைத் தூண்டும் வகையில் பணம் கொடுக்கப்படும் என்றும், பின் கட்டிய பணம் எல்லாம் சூறையாடப்படும் என்றும், இது ஆன்லைன் விளையாட்டு அல்ல என்றும், இது ஆன்லைன் மோசடி என்றும், இதன் காரணமாக பல குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றும், பணத்தை இழந்து அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது என்றும், தங்களுக்கு பிடித்த நடிகர்-நடிகையர் விளம்பரம் செய்கின்றனர் என்பதற்காக ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழக்க வேண்டாம் என்றும் காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களே வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அண்மையில் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

காவல் துறை தலைமை இயக்குநரே இதுபோன்று தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத்தை அணுகி இதனை உடனடியாகத் தடை செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு முனைப்புடன் செயல்படாதது வருத்தமளிக்கும் செயலாகும். லாட்டரி சீட்டு விற்பனையை பொறுத்தவரை நீதிமன்றத் தடை ஏதுமில்லாத சூழ்நிலையில், இதனைத் தடுத்து நிறுத்த அரசுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. அரசின் மெத்தனப் போக்கினைப் பார்க்கும்போது, ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவு இருக்கிறதோ என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. ஏற்கெனவே, கொலை, தற்கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் கொடுமைகள் ஆகியவை அதிகரித்துள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை போன்ற சூதாட்டங்கள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.

முதல்வர் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று சொன்னாலும், கள நிலவரம் வேறு மாதிரியாகவுள்ளது. சூதாட்டம், போதை பொருட்கள், கள்ளச் சாராயம், கடத்தல், பதுக்கல் ஆகியவற்றின் புகலிடமாக தமிழகம் விளங்குகிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றைத் தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி, ஆன்லைன் விளையாட்டிற்கு தடை பெறவும்; மறைமுக லாட்டரி விற்பனையை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும்; தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சீர்செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x