Published : 03 Jun 2022 08:23 AM
Last Updated : 03 Jun 2022 08:23 AM

பைக் விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாததால் இழப்பீடு குறைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாததால் கீழமை நீதிமன்றம் நிர்ணயம் செய்த இழப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்தை குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பெயிண்டர் பிரபு (35). இவர் 6.5.2016-ல் மோட்டார்சைக்கிளில் திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை சென்றார். அப்போது லாரி மோதி உயிரிழந்தார்.

உயிரிழந்த பிரபுவின் மனைவி பாண்டிமுத்து, மகள்கள் காவியா, திவ்யா, பிரபாவதி, பிரீதிகா, தந்தை வெள்ளைச்சாமி, தாயார் செல்வி ஆகியோர் சிவகங்கை வாகன விபத்துத் தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த தீர்ப்பாயம் பிரபு குடும்பத்துக்கு ரூ.17,63,800 இழப்பீடு வழங்க 22.6.2020-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நேஷனல் காப்பீட்டு நிறுவனத்தின் மதுரைக்கிளை மேலாளர் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.

அதில், விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். விபத்தில் தலையில் காயம் அடைந்து இறந்துள்ளார். ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி செல்லத்தக்க காப்பீடு வைத்திருக்கவில்லை. லாரி ஓட்டுநர் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை. எனவே, காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. பாண்டிமுத்து தரப்பில் தலையில் காயம் அடைந்ததால் மட்டும் பிரபு இறக்கவில்லை. மார்பு பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. விபத்தின்போது அவருக்கு வயது 29. அவருக்குக் குறைவாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

10 சதவீதம் குறைப்பு

விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால், விபத்தில் உயிரிழந்தவரின் கவனக்குறைவுக்காக கீழமை நீதிமன்றம் நிர்ணயம் செய்த இழப்பீட்டு தொகையில் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது.

அதன்படி கீழமை நீதிமன்றம் நிர்ணயித்த ரூ.17,63,800 இழப்பீட்டுத் தொகையில் பத்து சதவீதம் குறைத்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.15,12,800 மற்றும் அதற்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியும் 8 வாரத்தில் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும்.

பின்னர் இப்பணத்தை விபத்தை ஏற்படுத்திய லாரி உரிமையாளரிடம் இருந்து காப்பீட்டு நிறுவனம் வசூலித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x