Published : 03 Jun 2022 04:53 AM
Last Updated : 03 Jun 2022 04:53 AM

ஓராண்டுக்குள் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் - வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு

சென்னை: சமத்துவக் கல்வி, தேர்வு முறை சீர்திருத்தம் போன்றவற்றை உள்ளடக்கிய மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான வழிகாட்டுதல் அரசாணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. ஓராண்டுக்குள் கல்விக் கொள்கையை உருவாக்கி அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2020-ம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு மாற்றாக மாநிலத்துக்கென பிரத்யேக கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இதன் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக் குழு உறுப்பினர்கள் சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், யுனிசெப் முன்னாள் கல்வி நிபுணர் அருணா ரத்னம், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளை தலைவர் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாநில கல்விக் கொள்கைக்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளி யிட்டுள்ளார். அதன்விவரம்:

மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் இருப்பார். குழு உறுப்பினர் - செயலராக தனியார் பள்ளிகள் இயக்குநர் செயல்படுவார். தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்கால தேவைக்கேற்ப மாநிலத்துக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை தயார் செய்ய கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை பெற வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்தும், உலகளாவிய கல்வி, வளரிளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டும் கல்விக் கொள்கையை தயாரிக்க வேண்டும்.

இதுதவிர ஆசிரியர், பேராசிரியர் நியமனம் மற்றும் தேர்வு முறைகளில் செய்ய வேண்டிய சீரமைப்புகள், உயர்கல்வி ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும். சமத்துவக் கல்வி, வேலைவாய்ப்புக்கு ஏற்ற பாடத்திட்டம் இவற்றுடன் பள்ளிப்படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் கல்விக் கொள்கை இருக்க வேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கொள்கையை ஓராண்டுக்குள் தயார் செய்து அரசிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x