

சென்னை: சென்னை வானகரத்தில் வரும் 23-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக உட்கட்சித் தேர்தல் கடந்த மாதம் முடிவடைந்தது. ஊரக மற்றும் நகர்ப்புற கிளை நிர்வாகிகள் முதல் அனைத்து நிலைகளுக்குமான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல, தலைமை நிலைய நிர்வாகிகள், பல்வேறு அணிகளுக்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இந்த விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு, அதை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தைகூட்ட கட்சித் தலைமை முடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம்தேதி காலை 10 மணிக்கு, சென்னைவானகரத்தில் உள்ள வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், தற்காலிக அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
கட்சி செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக ஆக்கப்பூர்வான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்றுசில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. கட்சித் தலைமை, போதியஅளவு மகளிருக்கு பதவிகளைவழங்கவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடமகளிர் நிறுத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு, 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறத் தேவையான நடவடிக்கை களை மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள் ளன.