Published : 03 Jun 2022 07:53 AM
Last Updated : 03 Jun 2022 07:53 AM
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கலைஞர் எழுதுகோல்விருதை மூத்த பத்திரிகையாளர்ஐ.சண்முகநாதனுக்கும், கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருதை வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இதழியல் துறையில் சமூகமேம்பாட்டுக்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும், பங்காற்றி வரும் சிறந்தஇதழியலாளருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.
தமிழ் திரையுலகில் சிறந்துவிளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது வழங்கப்படும்.
தமிழக அரசின் சார்பில் இந்த விருதுகள் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும் என்று செய்தித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
மூத்த பத்திரிகையாளர்
அதன்படி, கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரைப்படி, 2021-ம் ஆண்டுக்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன்(87) தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் பிறந்த சண்முகநாதன், கடந்த 1953-ல் தினத்தந்தி நாளிதழில் உதவி ஆசிரியராக பொறுப்பேற்று, இதுநாள் வரை 70 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருகிறார்.
பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் நீண்டநாள் செய்தி ஆசிரியராக பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டை தீர்மானித்தவர்களில் ஒருவராக செயல்பட்டு வருகிறார்.
இவருக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூன் 3-ம் தேதி (இன்று) வழங்குகிறார்.
பிரபல வசனகர்த்தா
கலைத் துறை வித்தகர் விருதுக்கான விருதாளரை தேர்வு செய்ய இயக்குநர் எஸ்பி.முத்துராமன் தலைமையில் நடிகர் சங்கதலைவர் நாசர், இயக்குநர் கரு.பழனியப்பன் கொண்ட குழுஅமைக்கப்பட்டு, 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்காக, புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (90) தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவாரூரில் பிறந்த ஆரூர்தாஸ், முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் நடித்த ஆயிரம் திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம்தேதி (இன்று) ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது, பரிசுத்தொகை ரூ.10 லட்சத்தை முதல்வர் வழங்குகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கலைஞர் எழுதுகோல் விருது பெறும் சண்முகநாதனுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT