

கோவை: கோவை அவிநாசி சாலை கொடிசியா வர்த்தக மையவளாகத்தில் ‘இன்டெக் 2022’ என்ற சர்வதேச இயந்திர மற்றும் தொழில் வர்த்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் நடைபெறும், இக்கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு அதன் தலைவர்எம்.வி.ரமேஷ்பாபு தலைமை வகித்தார். சென்னையை சேர்ந்த டைம்லர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சத்யகம்ஆர்யா கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
தேசிய சிறு தொழில் நிறுவனங்கள் கழகத்தின் இயக்குநர் (திட்டம் மற்றும் சந்தைப்படுத்துதல்) பி.உதய்குமார் காணொலி வாயிலாக பேசினார். இன்டெக் கண்காட்சியின் தலைவர் ஆ.ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சீனா, தைவான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி,ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய வெளி மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள்,
தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. மொத்தமாக 6 அரங்குகளில் 410 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இயந்திர உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள், மின் துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகள், நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் ஸ்பிண்டில் டூலிங் தொழில்நுட்ப தயாரிப்புகள், ஹைட்ராலிக் தொழில்நுட்பங்கள், தொழில் துறையினருக்கான கருவிகள், மோட்டார்பம்ப்கள், கம்ப்ரஸர், ஃபில்டர், வெல்டிங் மற்றும் கட்டிங், லேசர் சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், வாயு சார்ந்த பொறியியல் சாதனங்கள், ஆட்டோமொபைல் உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள், பேரிங், கியர், எடைகளைக் கையாளும் இயந்திரங்கள், டிரில்லிங், எலக்ட்ரானிக்ஸ் அம்சங்கள் உட்பட பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற் றுள்ளன.
இதுகுறித்து கொடிசியா நிர்வாகிகள் கூறும்போது, “கண்காட்சி வரும்6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். தொழில் துறையினர், தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனத்தினர், கல்விநிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தமாக 50 ஆயிரம் பார்வையாளர்கள் வருகையும், ரூ.800 கோடி வரை வர்த்தகமும்நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.