Published : 20 May 2016 09:20 AM
Last Updated : 20 May 2016 09:20 AM

அதிமுகவில் மாற்றப்பட்ட வேட்பாளர்களில் 13 பேர் வெற்றி; தோல்வி 10 பேர்

அதிமுகவில் மாற்றம் செய்யப்பட்ட 23 வேட்பாளர்களில் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 10 பேர் தோல்வியை தழுவியுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ஜெயலலிதா அறிவித்தார். அதன்பிறகு 8 முறை வேட்பாளர்களை மாற்றினார். மொத்தம் 23 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். இவர்களில் தற்போது 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

ராதாபுரத்தில் லாரன்ஸுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட இன்பதுரை, கோவில்பட்டியில் ராமானுஜன் கணேஷுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட கடம்பூர் ராஜு, ஈரோடு மேற்கில் வரதராஜனுக்குப் பதிலாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், திருச்சி கிழக்கில் டாக்டர் தமிழரசிக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட வெல்லமண்டி நடராஜன், அரக்கோணத்தில் கோ.சி.மணிவண்ணனுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட சு.ரவி, மேட்டூரில் சந்திரசேகரனுக்குப் பதிலாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செ.செம்மலை ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோல, மதுரை வடக்கில் எம்.எஸ்.பாண்டியனுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, தியாகராய நகரில் சரஸ்வதி ரெங்கசாமிக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட பி.சத்தியநாராயணன், காட்டுமன்னார்கோவிலில் மணிகண்டனுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட முருகுமாறன், வேதாரண்யத்தில் கிரிதரனுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட ஓ.எஸ்.மணியன், பூம்புகாரில் நடராஜனுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட எஸ்.பவுன்ராஜ், ஸ்ரீவைகுண்டத்தில் டாக்டர் புவனேஸ்வரனுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், பாப்பிரெட்டிபட்டியில் குப்புசாமிக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட அமைச்சர் பி.பழனியப்பன், ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மாற்றப்பட்டவர்களில் 10 பேர் தோல்வியை தழுவியுள்ளனர். பாளையங்கோட்டை தொகுதியில் அ.தமிழ்மகன் உசேனுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட எஸ்.கே.ஹைதர் அலி, சங்கராபுரத்தில் ஏ.எஸ்.ஏ.ராஜசேகருக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட அமைச்சர் பி.மோகன்,அருப்புக்கோட்டையில் முத்துராஜாவுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், வேப்பனஹள்ளியில் கே.பி.முனுசாமிக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட மது என்ற ஹேம்நாத், பல்லாவரத்தில் இளங்கோவனுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட சி.ஆர்.சரஸ்வதி, பென்னாகரத்தில் வேலு மணிக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மன்னார்குடியில் சி.சுதாவுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட எஸ்.காமராஜ், கும்பகோணத்தில் ராமநாதனுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட ரத்னா சேகர், திருச்சி மேற்கில் தமிழரசிக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட மனோகரன், நாகர்கோவிலில் டாரதி சேம்சனுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட நாஞ்சில் முருகேசன் ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்.

ஒட்டன்சத்திரம் தொகுதியை முதலில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கி இருந்த அதிமுக, பிறகு அந்த தொகுதியை தங்களுக்காக எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக மஜகவுக்கு வேலூர் தொகுதியை விட்டுக் கொடுத்தது. இந்நிலையில், ஒட்டன்சத்திரத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.கிட்டுசாமியும் வேலூரில் மஜக வேட்பாளராக போட்டியிட்ட ஆரூண் ரஷீத்தும் தோல்வியைத் தழுவினர்.

தேமுதிகவில் இருந்து வந்த மாஃபா பாண்டியராஜன் ஆவடியில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தேமுதிகவில் இருந்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலந்தூரிலும் பாமகவில் இருந்து வந்த கலையரசு அணைக்கட்டு தொகுதியிலும் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x