Published : 03 Jun 2022 06:02 AM
Last Updated : 03 Jun 2022 06:02 AM

ரவுடிகள் குறித்து புகார் தெரிவிக்க செயலி: வணிகர்களுக்கு உதவ டிஜிபி நடவடிக்கை

சென்னை: ரவுடிகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வணிகர்கள் போலீஸாரிடம் உடனடியாகத் தெரிவிக்கும் வகையில், காவல் செயலியில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

பெண்கள் அவசரக் காலங்களில் காவல் துறையின் உதவியை உடனடியாகப் பெறும் வகையில், 60-க்கும் மேற்பட்ட சிறப்புஅம்சங்களுடன் ‘காவல் உதவி’ செயலிஉருவாக்கப்பட்டது. இந்த செயலியை கடந்தஏப்ரல் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிமுகப்படுத்தி, தொடங்கிவைத்தார். ‘ஆண்ட்ராய்டு’ செல்போன் வைத்திருக்கும் அனைவரும் இதை எளிதில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் கடந்த மாதம் 5-ம் தேதி வணிகர்கள் சங்க மாநாடு நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், வணிகர்கள் காவல் துறையினரிடம் எளிதில் புகார் அளிக்க வசதியாக, காவல் உதவி செயலியில், ‘வணிகர் உதவி வசதி’ ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதையடுத்து, வணிகர்கள் காவல் துறையினரின் அவசர உதவியை நாட ‘வணிகர் உதவி’ என்ற வசதி, காவல் உதவி செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியின் மூலம், ரவுடிகளால் ஏற்படும் இடையூறுகள் உள்ளிட்ட பிரச்சினைகள், மாமூல் வசூலித்தல், தாக்குதல், கடை மற்றும் கிடங்கில் திருட்டு, கந்து வட்டி, கடையில் வாக்குவாதம், சண்டை உள்ளிட்டவை தொடர்பாக புகார்களை அளிக்க முடியும்.

எனவே, வணிகர்கள் அனைவரும் காவல் உதவி செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x