Published : 03 Jun 2022 05:59 AM
Last Updated : 03 Jun 2022 05:59 AM
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இன்று (ஜூன் 3) பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-22-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், “நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கருத்துகளையும், சமூக சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 3-ம் தேதி (இன்று) கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.
இப்போட்டிகள் வடசென்னையில் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக் கல்லூரியிலும், மத்திய சென்னையில் பிராட்வே பாரதி மகளிர் கலைக் கல்லூரியிலும், தென்சென்னையில் சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT