

கடலூர்: சிதம்பரம் அருகே அம்மாபேட்டை கான்சாகிப் வாய்க்காலில் மந்தமாக நடந்து வரும் பாலப்பணியால், அப்பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் வராமல் தவித்து வருகின்றனர்.
சிதம்பரம் அருகே அம்மா பேட்டை கான்சாகிப் வாய்க்கால் பாலம் அண்டை மாவட்டங்களை கடலூர் மாவட்டத்துடன் இணைக் கும் முக்கிய பாலமாக இருந்தது. அதிக போக்குவரத்து காரணமாக அந்தப் பாலத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் அகலமான பாலத்தை கட்ட அரசு முடிவெடுத்தது.
அதன்படி நெடுஞ்சாலைத் துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டம் சார்பில் ரூ.4.35 கோடியில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
ஆனால், பாலம் கட்டும் பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனால் சிதம்பரத்துக்கு கிழக்கே உள்ள பகுதிகளுக்கு உரிய நேரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவாக பாலப்பணியை முடிக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் பெ.ரவிந்திரன் கூறுகையில், “ திட்டமிட்ட கட்டுமானப் பணியில் 5 சதவீதம் கூட நடக்கவில்லை. இன்னும் ஒரு மாத காலத்தில் கான்சாகிப் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு பாசன தண்னீர் செல்ல வேண்டும். ஆனால் இருக்கும் நிலைமையில் அதற்கான வாய்ப்பில்லை.
கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியின் கான்சாகிப் வாய்க்கால் பாசனப்பகுதி கடைமடை பாசன பகுதியாக உள்ளது.
ஏற்கெனவே இங்கு தண்ணீர் வந்து சேர தாமதம் ஏற்படுவதால் பின்சம்பா பருவ நெல்சாகுபடி மட்டுமே செய்ய முடியும். இச்சிக்கலை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், உரிய மாற்று முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.