Published : 03 Jun 2022 06:08 AM
Last Updated : 03 Jun 2022 06:08 AM
புதுச்சேரி: பஞ்ச பூதங்களிலும் காங்கிரஸ் ஊழல் புரிந்துள்ளது என புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை, 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பட்டியலின மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகம் செய்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரி மாநில பாஜக, பட்டியலின மக்களை பாதுகாக்கக் கூடிய இயக்கமாக மாறியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, குழந்தைகள் நலத் திட்டம், அரசு ஊழியர்கள், பென்ஷன், தாய்மார்கள், ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பிரதமர் அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரியாக பாவித்து திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.
ஜூன் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை கடந்த 8 ஆண்டு கால சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மக்கள் இயக்கமாக புதுச்சேரி பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம் செய்து வருகிறோம். பஞ்ச பூதங்களிலும் காங்கிரஸ் அரசு ஊழல் புரிந்துள்ளது. அதனை மீட்டெடுக்கும் ஒரு அரசாக மத்திய அரசு செயல்படுகிறது.
ஊழல் புகார் கூறும் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு எவ்வளவு சொத்து உள்ளது? அவர் மகன் என்ன தொழில் செய்கிறார்? கடந்த வருடங்களில் தேர்தல்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற விவரங்களை அவர் சொல்ல முடியுமா?
பாஜக ஆட்சியில் மட்டும்தான் அமலாக்கத்துறை செயல்படுகிறதா? காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா? அவர்களுக்கு மடியில் கனம் உள்ளது, அதனால் தான் பயம் இருக்கிறது.
ஊழல் செய்யாத காங்கிரஸ் காரர்கள் எவருமே இல்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT