ராமநாதபுரம் மாவட்டத்தில் 37,986 மீனவ குடும்பங்களுக்கு தடைக்கால நிவாரண நிதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 37,986 மீனவ குடும்பங்களுக்கு தடைக்கால நிவாரண நிதி
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 37,986 மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது.

மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும் தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை இரண்டு மாதங்களுக்கு விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளுர் ஆகிய 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தின்போது மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மீனவர்கள் சிரமமின்றி குடும்பத்தை நடத்த 2008-ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகையை தமிழக அரசு தடைக்காலம் முடிந்த பிறகுதான் வழங்கி வந்தது.

இந்நிலையில் சென்னையில் மீனவர் நலத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1.90 லட்சம் மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.95 கோடி வழங்குவதற்கான ஆணைகளை மே 28-ம் தேதி வழங்கி தொடங்கி வைத்தார்.

இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 37,986 மீனவ குடும்பங்களுக்கு நடப்பு ஆண்டு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. இது கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு 3 ஆயிரம் போ் அதிகமாக நிதி பெறுவதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in