

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 7 ஆண்டுகளில் 41,311 வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகமும், வாகனங்களுக்கு எரிவாயு நிரப்பும் 11 நிலையங்களும் அமைக்கப்படும் என ஏஜி அன்ட் பி பிரதாம் நிறுவன மண்டல தலைவர் பூமாரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய நகர எரிவாயு விநியோக துறையில் முன்னணி நிறுவனமான ஏஜி அன்ட் பி பிரதாம் நிறுவனம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் ஐந்து மாநிலங்களில் இயற்கை எரிவாயுவை பிரத்யேகமாக வழங்க உள்ளது.
அதன்படி தமிழகத்தில் ராமநாதபுரம், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு குழாய் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) மற்றும் வாகனங்களுக்கு வழங்கும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) நிலையங்களை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இரும்பு குழாய் பதிக்கும் பணியை தொடங்கியுள்ளது. இயற்கை எரிவாயு எல்பிஜியை விட 50 சதவீத கட்டணத்தை குறைத்து, வீடுகளில் சமையல் எரிபொருளில் 22 சதவீத சேமிப்பை ஏற்படுத்துகிறது.
இயற்கை எரிவாயு விநியோ கத்தை ராமநாதபுரத்தில் பட்டணம் காத்தான் மற்றும் ராமேசுவரம் பகுதிகளில் எரிவாயு கட்டங்களை நிறுவி, மார்ச் 2023-க்குள் 15,000 பிஎன்ஜி இணைப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தற்போது இயற்கை எரிவாயு ஆலை அமைந்துள்ள வழுதூரில் இருந்து ராமநாதபுரம் குமரையாகோயில் வரை ஸ்டீல் குழாய் பதிக்கும் பணியையும் தொடங்கியுள்ளது. எரிவாயு நிரப்பும் நிலையம் குயவன்குடி கிராமத்தில் நிறுவப்படும்.
அடுத்த 7 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 சிஎன்ஜி நிரப்பு நிலையங்களை நிறுவுவதோடு, 41,311 வீடுகளுக்கு குழாய் இயற்கை எரிவாயு இணைப்புகளையும் வழங்கும்.
பாதுகாப்பான, பசுமையான எரிபொருளைப் பயன்படுத்துவதை எளிதாக்கும் அரசாங்கத்தின் பார்வைக்கு இணங்க, கார்கள், ஆட்டோக்கள், பேருந்துகள் மற்றும் டிரக்குகள் போன்ற கனரக போக்குவரத்து வாகனங்களுக்கு இயற்கை எரிவாயுவை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் இயற்கை எரிவாயு அதன் நச்சுத்தன்மையற்ற மற்றும் காற்றைவிட இலகுவான தரம் எளிதில் ஆவியாகி தீ அபாயத்தை குறைக்கிறது என்றார்.