விபத்தில் சிக்கிய முதியவரின் ரூ.4 லட்சத்தை ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

விபத்தில் சிக்கிய முதியவரின் ரூ.4 லட்சத்தை ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

Published on

திருச்சியில் விபத்தில் சிக்கிய முதியவர் வைத்திருந்த ரூ.4 லட்சத்தை, அவரது மகனிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(60). இவர், ஜங்ஷன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றபோது, எதிர்பாராதவிதமாக இரும்புத் தடுப்பில் மோதினார். தலையில் காயமடைந்த செல்வராஜ், மயங்கி கீழே விழுந்தார்.

தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜா, மருத்துவ உதவியாளர் சசிகபூர் ஆகியோர், அவருக்கு முதலுதவி அளித்து, ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்குப் புறப்பட்டனர்.

அப்போது, செல்வராஜின் உடமைகளை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சோதனை செய்தபோது, அதில் ரூ.4 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, செல்வராஜின் செல்போன் மூலம், அவரது மகனுக்குத் தகவல் கொடுத்து, மருத்துவமனைக்கு வரவழைத்தனர். பின்னர், செல்வராஜ் வைத்திருந்த ரூ.4 லட்சம், அவரது கைக்கடிகாரம், பர்ஸ் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும், செல்வராஜின் மகனிடம் ஒப்படைத்தனர். நேர்மையுடன் செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களை, செல்வராஜின் உறவினர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in