

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் பகுதியில்இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது. மதுஅருந்தும் கும்பல் காலி பாட்டில்களை தெப்பக்குளத்துக்குள்ளும், குளக்கரையிலும் வீசி எறிவதால்பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள பிரசித்திபெற்ற தாணுமாலய சுவாமி கோயிலுக்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சுசீந்திரம் கோயிலில் சமீபத்தில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதன் பொருட்டு குளத்துக்குதண்ணீர் வராமல் அடைபட்டுகிடந்த குழாய், கால்வாய்களையும், தண்ணீர் வெளியே செல்லும் மடைகளையும் சீரமைக்கும் பணியில் பக்தர்கள் முனைப்புடன் செயல்பட்டனர்.
இதற்காக சுசீந்திரம் தாணுமாலய சுவாமி தெப்பக்குளம் சீரமைப்பு பக்தர்கள் அமைப்புஏற்படுத்தப்பட்டு தெப்பக்குளத்தின் புனிதத்தை காத்து வருகின்றனர். மடைகள், கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்ட பகுதியை நிரந்தரமாக சீரமைப்பதற்கான நடவடிக்கையை அவர்கள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தெப்பகுளத்தின் புனிதத்தை சீர் குலைக்கும் வகையில் சமீப காலமாக அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் தெப்பக்குளத்தின் கரைப்பகுதிகளில் அமர்ந்து மது அருந்தும் கும்பல், காலி மதுபாட்டில்களை குளக்கரையிலும், குளத்துக்குள்ளும் வீசி எறிகின்றனர்.
இதனால் தெப்பக்குளக்கரை திறந்த வெளி மதுக்கூடம் போல் மாறி விட்டது.
இதுகுறித்து சுசீந்திரம் கோயில் பக்தர்கள் அமைப்பினர் கூறும்போது, ‘‘கடந்தசில நாட்களாகவே தெப்பக்குளத்துக்குள்ளும், குளக்கரையிலும் காலி மதுபாட்டில்கள் பரவலாக கிடக்கின்றன. தண்ணீரில் பீர் பாட்டில்கள் மிதக்கின்றன.
குளத்தில் உடைந்து கிடந்த மதுபாட்டில் குத்தியதில் அங்கு குளித்த சுற்றுலா பயணியின் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தெப்பக்குளத்தை பாதுகாக்க கோயில் நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.