

வீட்டுத் தொட்டியில் வண்ண மீன்கள் வளர்த்து வந்த பலர் அதேபோல கடல் மீன் வளர்ப் பதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
வீடுகளில் கண்ணாடிக் குடுவைகளிலும், கண்ணாடித் தொட்டியிலும் வண்ண மீன்கள் வளர்ப்பதில் சிறியவர்கள் மட்டு மின்றி பெரியவர்களுக்கும் ஆர்வம் அதிகம். வீடுகளில் பெரும்பாலும் வாஸ்து மீன், கோல்டு பிஷ், சாரிக், டெட்ரா, ஏஞ்சல், அரவணா போன்ற மீன்கள் வளர்க்கப்படுவது வழக் கம். வீட்டில் மீன் வளர்த்தால் கண் திருஷ்டி இருக்காது என்றும், வரும் பிரச்சினைகளை மீன்கள் மூலம் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் பலருக்கு உண்டு.
இருப்பினும், வீட்டில் மீன் வளர்ப்பதால் மன இறுக்கம், சோர்வு, மனக்குழப்பம் போன்றவை நீங்கும் என்றும் கூறப்படுகிறது. அதோடு, தொட்டியில் உள்ள மீன்களுக்கு உணவு வழங்கி சிறுவர்கள் விளையாடுவதும் உண்டு. குறிப்பாக கோடை விடுமுறையில் மீன் வளர்ப்பதில் சிறுவர்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். இந்நிலையில், வீடுகளில் குடுவைகளிலும், தொட்டிகளிலும் நன்னீரில் மீன்கள் வளர்ப்போரிடையே தற்போது கடல் மீன் வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக கண்ணாடித் தொட்டியில் கடல்நீர் நிரப்பப்பட்டு அதில், கிளவுன் பிஷ், ட்ரூபர்குலா, சீ அனிமூன், நட்சத்திர மீன், ப்ளூடான்சல், ஸ்தீனிஸ்பார்ட் போன்ற கடலில் மட்டுமே உயிர் வாழக்கூடிய மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, விருதுநகரில் கடல்மீன் தொட்டி அமைத்து விற்பனை செய்துவரும் ஜெயக்குமார் கூறியதாவது: பொதுவாக வீடுகளில் நன்னீரில் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகள் மட்டுமே வளர்க்கப்படுவது வழக்கம். தற்போது, வீட்டுத் தொட்டியில் கடல் மீன் வளர்க்கும் ஆர்வம் பலரிடையே அதிகரித்துள்ளது.
நன்னீர் மீன்குஞ்சுகளை வளர்த்து பராமரிப்பதை விட கடல் மீன்களை வளர்ப்பது மிக எளிது. ஒருமுறை கடல் நீர் நிரப்பப்பட்டால் போதுமானது. அடிக்கடி தண்ணீர் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், தொட்டியில் உள்ள கடல் நீரில் உப்பின் அளவு 20-30 சதவிகிதம் இருப்பதை அவ்வப்போது உறுதிசெய்து கொள்ள வேண்டும். வெப்ப நிலையும் 33 டிகிரிக்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். 3 மாதத்துக்குப் பிறகு கடல் மீன்களுக்கு ஏற்றவகையில் தண்ணீர் மாறிவிடும்.
கடல் மீன் வளர்க்கும் தொட்டியில் கடலுக்கடியில் உள்ளதைப்போல சிப்பிகள், சங்கு, கடல் தாவரங்கள், கடல் நுரை போன்றவை அமைத்துக் கொடுக்கப்படும். அதோடு, தண்ணீரில் அலைகளை உருவாக்கவும் சிறு இயந்திரம் பொருத்தப்படும். தொட்டியின் அளவைப் பொறுத்து, இவை குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அண்மையில், கடல் மீன் வளர்ப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், விருதுநகரில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் வீட்டில் கடல் மீன் தொட்டிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.