

திருநெல்வேலி: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தின் வடபுறமுள்ள சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து பரிதாபகரமாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி விடுமுறையில் இங்குவரும் சிறுவர், சிறுமியருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பாளையங்கோட்டையின் முக்கிய அடையாளமான வ.உ.சி. மைதானம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. மைதானத்தின் வடபுறம் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பெயரளவில் செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் இங்கு பல்வேறு விதமாக அமைக்கப்பட்டிருந்தன.
அம்ருத் திட்டத்தின் கீழ் கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.10 லட்சத்தில் ஊஞ்சல்கள், சறுக்குகள் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு உபகரணங்கள், நீர்வீழ்ச்சிகள் போன்ற அமைப்பு, பழைய இரும்பு பொருட்களால் உருவாக்கப்பட்ட குதிரை உள்ளிட்ட விலங்குகள், பறவைகளின் உருவங்களும் நிறுவப்பட்டிருந்தன. வார விடுமுறை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் மாலையிலும், இரவிலும் சிறுவர், சிறுமியரும், அவர்களது பெற்றோரும் ஏராளமானோர் இந்த பூங்காவுக்கு வந்து செல்வார்கள்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான சிறுவர், சிறுமியர் ஆவலுடன் இந்த பூங்காவுக்கு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் பலவும் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. தரமற்ற பொருட்களால் உருவாக்கப்பட்டதால், உபகரணங்கள் அமைக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே சேதமடைந்திருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
பூங்காவில் உள்ள சறுக்குகள் உடைக்கப்பட்டிருக்கிறது. ஊஞ்சலின் கம்பிகளும் அறுந்து கிடக்கின்றன. இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த பூங்கா மாற்றப்பட்டு வருகிறது. சிலர் மது குடித்து விட்டு பாட்டில்களை வீசிவிட்டு செல்கிறார்கள். பூங்காவிலுள்ள கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் சிதிலமடைந்து, குப்பைகள் நிரம்பியிருக்கிறது.
சிறுவர்களுக்கான இந்த பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவும், அதை முறையாக பராமரிக்கவும், தரமான பொருட்களால் உபகரணங்களை அமைக்கவும், சமூக விரோதிகளின் அட்டகாசத்தை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.