Last Updated : 10 May, 2016 04:48 PM

 

Published : 10 May 2016 04:48 PM
Last Updated : 10 May 2016 04:48 PM

சிதம்பரத்தை கைப்பற்றப் போவது யார்?

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சிதம்பரம் சிறிய தொகுதி.

நடராஜர் கோயில், தில்லைக் காளியம்மன் கோவில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பிச்சாவரம் வனப் பகுதி, பரங்கிப்பேட்டை பாபா கோயில் ஆகியவை கொண்ட சுற்றுலாத் தலமாகவும், கல்வித் தலமாகவும். ஆன்மீகத்தலமாகவும் இத்தொகுதி விளங்கி வருகிறது.

விவசாயம் இங்கு பிரதானத் தொழில். பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் கிடையாது. தொழிற்வளர்ச்சியில் சிதம்பரம் மிகவும் பின் தங்கிய தொகுதியாகும். 1952ம் ஆண்டு இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொகுதி. வன்னியர், ஆதிதிராவிடர், கார்காத்தார், செட்டியார், நாயுடு, முஸ்லிம், மீனவர்கள், கிருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் பரவலாக உள்ளனர்.

சிதம்பரத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கவரிங் தொழில் கொடி கட்டி பறக்கிறது. பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதி சிதம்பரம். 2 லட்சத்து 28 ஆயிரத்து 168 வாக்காளர்கள் உள்ளனர். 1லட்சத்து 13 ஆயிரத்து 308 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 853பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 7 பேரும் உள்ளனர். சிதம்பரம் தொகுதி தேர்தல் களத்தில் 13 வேட்பாளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக போட்டியிடுகிறது. திமுக சார்பில் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர் செல்வத்தின் அக்கா மகன் செந்தில்குமார் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக குமராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாண்டியன், மக்கள் நலக்கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். பாமக வேட்பாளராக பசுமை தாயகத்தின் பொது செயலாளர் அருள், பாஜக வேட்பாளராக மணிமாறன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சதீஷ்குமார், சோஷியல் டெமாக்கரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா வேட்பாளராக அப்துல்சத்தார் மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் என களத்தில் உள்ளனர்.

இந்த தொகுதியில் குடிநீர் பிரச்சனை தீராத பிரச்சனையாக உள்ளது. சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வரவில்லை என்ற குறை மக்களிடம் உள்ளது. அரசு வெள்ள தடுப்பு நடவடிக்கையை சரியாக எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கிராம மக்களிடம் உள்ளது. அனைத்து பாசன, வடிகால் வாய்க்காலை தூர்வாரிட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

கொள்ளிடம் ஊற்று நீரை தடுப்பணை கட்டி அந்த தண்ணீரை திருப்பி கான்சாகிப் வாய்க்காலில் விட்டால் சிதம்பரம் கீழ் பகுதி மக்களுக்கு விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால் இந்தத் திட்டம் வெறுமே பேச்சளவில் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தாததால் கிள்ளை, பிச்சாவரம் பகுதி மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

சுந்தரவனக் காடுகளை தன்னகத்தே கொண்ட அழகிய பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக உள்ளது.

பரங்கிப்பேட்டை, முடல்ஓடை ஆகிய பகுதிகளில் கடல் முகத்துவாரத்தில் உள்ள மணல் மேடுகளை அகற்றிட வேண்டும் என்பதும் இந்த தொகுதி மீனவர்களின் குரலாக தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் எடுத்து செய்ய போகிறவர்கள் யார் என்பது தெரியாமல் வாக்காளர்கள் சற்றே குழப்ப மனநிலையில் இருப்பதை நாம் தொகுதியை சுற்றி வந்த போது உணர முடிந்தது.

எனினும் தொகுதியில் அதிகமாக வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாய மக்களின் வாக்குகளை அதிகம் பெறுவோருக்கே வெற்றி வாய்ப்பு என்ற நிலை உள்ளது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான பாண்டியன், செந்தில்குமார், பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணன் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். தொகுதியை மீண்டு தக்க வைத்திட மக்கள் நலக்கூட்டணிக்கட்சியினர் கிராமப்புறங்களில் வெள்ள பாதிப்பின் போது செய்த உதவிகளைக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினர் குழுக்களாக பிரிந்து அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திமுகவினர் தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு தேர்தல் யுத்திகளை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர். 'தமிழகத்தில் மாற்றம் வேண்டும்' என்ற கூறி இளைஞர்களை கவரும் விதமாக அன்புமணியின் தேர்தல் அறிக்கைகளை கூறி பாமகவினர் ஓட்டு கேட்கின்றனர். மற்ற வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவும், திமுகவும் சமபலத்துடன் உள்ளது. மக்கள் நலக்கூட்டணி மற்றும் பாமக இரண்டாவது இடத்தில் உள்ளது. வாக்கு சேகரிக்க பயன்படுத்தப்படும் யுத்தியும், தீவிரப்பிரச்சாரமும், சிதறாமல் வாக்குகளை ஒரே புள்ளியில் குவிக்க வைப்பதும் தான் வெற்றியை நிர்ணயம் செய்யும்.

பாண்டியன் அதிமுக வேட்பாளர்

குமராட்சி ஒன்றியத்தில் பழைய கொள்ளிடத்தில் தண்ணீர் கடலுக்கு செல்வதை தடுத்து தேக்கி, மின்மோட்டார்களை வைத்து அதன் மூலம் நீரேற்று திட்டம் அமைத்து தருவேன். இதன்மூலம் வல்லம்படுகை, அத்திப்பட்டு, ஆலம்பாடி, தீத்துகுடி உள்ளிட்ட 25 கிராமங்களுக்கு பாசனவசதி செய்து தரப்படும்.

சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். பரங்கிபேட்டை ஒன்றியம் கிள்ளை பேரூராட்சியில் எம்.ஜி.ஆர் திட்டு, முழுக்கு துறை ஆகிய இடத்தில் முகத்துவாரத்தில் உள்ள மணல் தூர் வாரப்பட்டு மீனவர்கள் நேரடியாக கடலுக்கு செல்ல ஏற்பாடு செய்யபடும். கொள்ளிடம் ஆற்றில் 15 இடங்களில் புதிய கதவனைகள் கட்டப்படும். கொள்ளிடத்தில் கதவணை கட்டி கான்சாகிப் வாய்க்காலில் தண்ணீரை திருப்பிவிட 250 கோடி செலவில் திட்டம் நிறைவேற பாடுபடுவேன், சிதம்பரம் கடலூர் கிழக்கு கடற்கரை சாலையில் மழை நேரத்தில் ஏற்படும் சாலை பாதிப்பை தவிர்க்க பரவனாற்றில் இரு பக்க கரைகளை உயர்த்தி வெள்ள தடுப்பு திட்டம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு ஆண்டும் அதிக வெள்ள சேதத்தை தடுத்திட சிதம்பரம் தொகுதியில் பரங்கிபேட்டை வழியாக ஓடும் மேல்பரவனாற்றிலும்,இடை பரவனாற்றிலும் கரைகளை பலபடுத்துவது , சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இயன் முறை சிகிச்சை பிரிவு கொண்டு வரப்படும்.முதலை பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செந்தில்குமார் திமுக வேட்பாளர்

சிதம்பரத்தில் விடுதியுடன் கூறிய மகளிர் கல்லூரி அமைக்கப்படும். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் விஷக்கடிக்கு தனி பிரிவு தொடங்கப்படும். பொதுமக்களை அச்சப்படுத்தி வரும் முதலைகளை கட்டுப்படுத்திட பழைய கொள்ளிடத்தில் முதலைப் பண்ணை அமைக்கப்படும். உப்புநீர் உள்புகுவதை தடுக்கும் வகையில் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும். சிதம்பரம் புறவழிச்சாலையில் ரவுண்டானா அமைத்து உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படும். கான்சாகிப் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் திட்டம் தயார் செய்து செயல்படுத்தப்படும். வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் பாலகிருஷ்ணன் எம்எல்ஏ

அண்ணாமலைப் பல்கலைக்கழத்துக்கு நிதி கிடைக்க நடவடிக்கை எடுத்து ஆசிரியர், ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு செய்யப்படும். சிதம்பரத்தில் மகளிர் கல்லூரி அமைக்கப்படும். வெள்ளத் தடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். சிதம்பரம் பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். சிதம்பரத்தில் கொடி கட்டி பறக்கும் கவரிங் தொழிலுக்கு தொழில் பாதுப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சிதம்பரத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்படும். சைமா சாயப்பட்டறை தடுத்து நிறுத்தப்படும். கொள்ளிடத்தில் இருந்து கான்சாகிப் வாய்க்காலுக்கு ஊற்று நீரை திருப்பி விடும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் சிதம்பரம் பகுதி விவசாயம் செழிக்கும்.

அருள் பாமக வேட்பாளர்

சோழர்கள் ஆண்ட சிதம்பரத்தில் முதன்முதலில் இரும்பு தொழிற்சாலை இருந்தது. இங்கு தற்போது எந்த விதமான தொழிற்சாலையும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இந்தப் பகுதியில் முல்லை பூ அதிக அளவில் பயிரிடுவதால் சென்ட் தொழிற்சாலை அமைக்க பாடுபடுவேன். சிதம்பரத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டு அது கிடப்பில் உள்ளது. அதனை நிறைவேற்றச் செய்வேன். புறவழி சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதனை தடுக்க 3 இடங்களில் ரவுண்டானா அமைக்கப்படும். சிதம்பரம் அருகே அமைய இருக்கும் சாய கழிவு தொழிற்சாலை தடுத்து நிறுத்துவேன். அண்ணாமலைபல்கலைக்கழகம் நிதி ஆதாரத்தை பெருக்கி அனைத்து ஊழியர்களுக்கும் பணிபாதுகாப்பை உறுதிசெய்வேன். மகளிர் கல்லூரி அமைத்து தரப்படும்.

மக்கள் வாய்ஸ்

ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தரலிங்கம்

நகராட்சி சார்பில் நகரின் மையப்பகுதியில் மேல்நிலைப்பள்ளி அமைக்கவேண்டும். ஆக்கிரிமிப்புகளை அகற்ற வேண்டும். படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு மையங்களை உருவாக்க வேண்டும். போக்குவரத்துக்கு ஏற்றது போன்று சாலைகளை சீர் செய்ய வேண்டும்.

சமூக ஆர்வலர் ஜோதிகுருவாயூரப்பன்

சிதம்பரம் நகரை சுற்றுலா பகுதியாக மாற்றி பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்திட வேண்டும். தொடர்ந்து இருக்கும் குடிநீர் பஞ்சத்தை போக்கிட நிரந்தர தீர்வு கண்டு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலை ஊழியர் கல்யாணம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நிதி ஆதாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்து அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பணி பாதுகாப்பு தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட வேண்டும். குடிநீர் பிரச்சினை, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட மக்கள் நலப்பிரச்சினைகளை உடனே செய்திட வேண்டும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x