Published : 03 Jun 2022 06:06 AM
Last Updated : 03 Jun 2022 06:06 AM
வேலூர்: காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியின் காரணமாக மூடப்பட்ட நிலையில் மோசமான மாற்றுப்பாதையில் பயணம் செய்ய முடியாமல் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழக-ஆந்திர மாநிலத்தை இணைக்கும் சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மிக முக்கியமான பாலமாக காட்பாடி ரயில்வே மேம்பாலம் இருந்து வருகிறது. இந்த ஒற்றைப் பாலம் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் கடந்த நிலையில் பலவீனம் அடைந்துள்ளது.
இதனால், ரூ.2 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்தில் சீரமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கப்பட்டது. மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர், அலங்கார வளைவு உள்ளிட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்ட நிலையில் மேம் பாலத்தின் தளத்தை சீரமைக்க வேண்டியுள்ளது.
இதற்காக, காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் கடந்த 1-ம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எந்தவித முன்னேற்பாடுகள் இல்லாமல் மாற்றுப்பாதைகள் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மோசமான மாற்றுப்பாதையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் வேதனையில் இருந்து வருகின்றனர்.
கனரக வாகனங்கள் வடுகன்தாங்கல், விரிஞ்சிபுரம் வழியாக வேலூர் செல்ல அறிவிப்பு வெளியிட்டாலும், காட்பாடி செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள் கிளித்தான்பட்டறை அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் வழியாக நுழைந்து தாராபடவேடு குடியிருப்பு வாரியம், அருப்புமேடு வழியாக ஓடைபிள்ளையார் கோயில் சந்திப்பை அடைகின்றனர். அதேபாதையில் மீண்டும் காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர்.
மின் விளக்கு பொருத்த வேண்டும்
குண்டும் குழியுமாக இருக்கும் இந்த சாலையில் மின் விளக்கும் வெளிச்சமும் இல்லாமல், டாஸ்மாக் மதுபான கடையை கடந்து பெண்கள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், பாதாள சாக்கடை மூடிகள் திறந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. இரவு நேரங்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் மின் விளக்கு பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
அதேபோல், வள்ளிமலை கூட்டுச்சாலை சந்திப்பில் இருந்து பி.சி.கே நகர் அருகில் உள்ள ரயில்வே தரைப்பாலம் வழியாக பழைய காட்பாடியை அடையும் சாலையும் மோசமாகவே உள்ளது. சித்தூரில் இருந்து வேலூர் வரும் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் காட்பாடி வழியாக செல்லாமல் சேர்க்காடு வழியாக செல்ல போதுமான அறிவிப்பு பலகைகள் இல்லாமல் இருப்பதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் தற்காலிக மாற்றுப்பாதையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமாரிடம் கேட்டதற்கு, ‘‘மாற்றுப்பாதையில் தற்காலிகமாக சாலையை சீரமைக்க உத்தர விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் உடனடியாக தொடங்கும்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT