வழக்கு நிலுவையில் இருந்தாலும் பாஸ்போர்ட் வழங்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

உயர் நீதிமன்றம் கிளை, மதுரை.
உயர் நீதிமன்றம் கிளை, மதுரை.
Updated on
1 min read

சென்னை: ''பாஸ்போர்ட் பெறுவதற்கு முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது ஒரு தடையல்ல'' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''நான் மலேசியாவில் தொழில் செய்து வருகிறேன். நான் சொந்த ஊருக்கு வந்திருந்த 2017, 2018-ல் என் மீது 3 குற்ற வழக்குகள் பதிவானது. அதில் ஒரு வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையிலும், 2 வழக்குகள் நீதிமன்றத்திலும் உள்ளது.

இந்நிலையில் எனது 7.7.2023 வரை செல்லத்தக்க பாஸ்போர்ட் மலேசியாவில் தொலைந்துவிட்டது. மலேசியா போலீஸில் புகார் செய்தேன். பின்னர் புதிய பாஸ்போர்ட் கேட்டு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால் என் மீதுள்ள குற்ற வழக்குகளை காரணம் காட்டி எனக்கு பாஸ்போர்ட் தர மறுத்துவிட்டனர். எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ''பாஸ்போர்ட் வழங்குவதற்கு முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது ஒரு தடையல்ல என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தால் பாஸ்போர்ட் பெற நீதிமன்ற அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி மனுதாரர் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் போது தான் பொருந்தும். வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்புவதற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை.

எனவே மனுதாரர் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை ஏற்று 2 ஆண்டு செல்லத்தக்க வகையில் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும். அந்த பாஸ்போர்ட்டில் மனுதாரர் இந்தியா திரும்பியதும் அவர் மீதான வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும். பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலத்திற்குள் வழக்கு முடிவுக்கு வராவிட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மத்திய அரசின் 14.4.1976 அறிவிப்பாணை அடிப்படையில் உரிய அனுமதி பெற வேண்டும்'' என்று நீதிபதி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in