Published : 14 May 2016 02:41 PM
Last Updated : 14 May 2016 02:41 PM

ஒட்டன்சத்திரம் தொகுதியில் 5-வது முறையாக சாதிப்பாரா சக்கரபாணி ?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 1996-ம் ஆண்டு முதன் முறையாக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அர.சக்கரபாணி. 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எதிர்ப்பு அலையில் பெரும்பாலான இடங்களில் திமுக தோற்றது. ஆனால், ஒட்டன்சத்திரம் தொகுதியில் சக்கரபாணி வெற்றி பெற்றார். 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தபோது இவரது ‘ஹாட்ரிக்’ வெற்றியை கவுரவிக்கும் வகையில் இவருக்கு அரசு கொறடா பதவியை வழங்கியது திமுக தலைமை.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தே பெறமுடியாத அளவுக்கு திமுக தோல்வியை தழுவியது. இந்த அலையிலும் கரை சேர்ந்தார் சக்கரபாணி. இது இவரது நான்காவது வெற்றி.

தென்மாவட்டங்களில் எந்த கட்சியிலும் ஒரே தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர்கள் தற்போதைக்கு இல்லை. நத்தத்தில் அதிமுக சார்பில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நத்தம் ஆர்.விசுவநாதன் முதல் முறையாக வெற்றி பெற்றார். இவர் அடுத்தடுத்து வந்த மூன்று தேர்தல்களிலும் ஒரே தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தற்போது ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றவர் பாலபாரதி. இவர் தற்போது போட்டியிடவில்லை.

ஆனால், ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஐந்தாவது முறையாக மீண்டும் களம் இறங்கியுள்ளார் சக்கரபாணி. இது குறித்து அர.சக்கரபாணி `தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:

பத்து ஆண்டுகள் ஆளும் கட்சி எம்எல்ஏவாகவும், பத்து ஆண்டுகள் எதிர்க்கட்சி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளேன். ராஜ்யசபா எம்பி நிதியைப் பெற்று சமுதாயக்கூடங்கள், கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள் ஆகியவற்றை கட்டியுள்ளேன். நீதிமன்றக் கிளை, மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளேன்.

ஒட்டன்சத்திரம் குடிநீர் பிரச்சினை யை தீர்க்க என் முயற்சியால் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. வறண்ட பகுதியான தொப்பம்பட்டி ஒன்றியத்தில் நல்லதங்காள் ஓடையில் அணை கட்டும் திட்டத்தையும் அதிமுக ஆட்சி முடக்கிவிட்டது.

மீண்டும் வெற்றிபெற்று வந்தவுடன் அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவேன். மக்கள் என்னை மீண்டும் வெற்றிபெறச் செய்வது உறுதி என்றார்.

தொடர் எம்எல்ஏக்கள்

நத்தம் தொகுதியில் மறைந்த ஆண்டிஅம்பலம் 22 ஆண்டுகள் தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்துள்ளார். திண்டுக்கல் தொகுதியில் பாலபாரதி 15 ஆண்டுகள், நத்தம் தொகுதியில் விசுவநாதன் 17 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்துள்ளனர்.

ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி தொடர்ந்து போட்டியிட்டும் 1991, 2001-ம் ஆண்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் 17 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தும் தொடர் சாதனை படைக்க முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x