கச்சத்தீவை மீட்க சரியான தருணம்: தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம்

கச்சத்தீவை மீட்க சரியான தருணம்: தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
Updated on
2 min read

சென்னை: “இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு எடுக்க சரியான தருணம். எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்” என்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோனை கூட்டம் இன்று கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

> கட்சியின் வளர்ச்சிப் பணிகளை முழுமையாக செய்து நாட்டின் வளர்ச்சிக்காக, நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் கொள்கை கோட்பாடுகளை ஊரெங்கும் பறைசாற்றி வாழ்நாள் முழுவதும் தேமுதிகவுக்கு தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்த, கட்சியின் தியாக தொண்டர்களுக்கு தேமுதிக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது பிரிவால் வாடும் குடும்பத்தினர் வருத்தத்தில் பங்கு கொள்கிறது. அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறது.

> கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 25-ம் நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் வகையில், பட்டி தொட்டியெங்கும் கட்சிக் கொடியை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், நோட்டுப் புத்தகம் வழங்கியும், தமிழக மக்களின் நல்வாழ்விற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கியும், நாட்டு மக்களுக்கு நல்லதொரு வெளிப்படையான விஜயகாந்தின் ஆட்சி ஏற்படுத்திட தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழுமையாக உழைத்திட வேண்டும் என்று இந்த நன்னாளில் சபதம் ஏற்றிட தேமுதிக வலியுறுத்துகிறது.

> உலகிலேயே பருத்தி பின்னலாடைகளின் உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. பலகோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த பருத்தி தொழில், இன்று நசிந்து பாழடைந்து கிடக்கிறது. பருத்தியின் லாபம் விளைவிப்பர்களுக்கு செல்லாமல், இடையில் நிற்கும் தரகர்கள், முதலாளிகளின் பதுக்கல் காரணமாக 150 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி விலை கூடி நூல் விலை எட்டாத உயரத்திற்கு சென்ற காரணத்தால், பல தொழிற்சாலைகள் மூடப்படுவதால், தொழிலாளர்கள் வர்க்கம் பசி பட்டினியால் மூழ்கிக்கிடக்கிறது. இந்த நிலையை கண்டும் காணாத மாதிரி இருக்கும் மத்திய, மாநில அரசுகளை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. அதிகப்படியான பருத்தி ஏற்றுமதியை குறைத்து பதுக்கலை நீக்கி, பருத்தி தொழிலாளர்களை காப்பாற்றிட தேமுதிக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

> திமுக அரசு என்றாலே மின்வெட்டுதான் தமிழக மக்களுக்கு நினைவுக்கு வருகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக விவசாயம், தொழில்கள், வியாபாரம், கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. மின்வெட்டுக்கான காரணத்தை அறிந்து, அதன் குறைபாடுகளை நீக்கி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி, தமிழக மக்களையும், மாணவர்களையும் மின்வெட்டில் இருந்து காப்பாற்றிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட தேமுதிக வலியுறுத்துகிறது.

> தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து உயிர் சேதமும், பொருள் சேதமும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தருவது. ஏற்கெனவே இலங்கையிடம் இருக்கும் படகுகளை மீட்டு எடுத்து தமிழக மீனவர்களிடம் ஒப்படைப்பது. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவு மீட்டு எடுக்க சரியான தருணம். எனவே மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்காமல் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக காப்பது, பெட்ரோல், டீசல் என அனைத்து விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட தேமுதிக வலியுறுத்துகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in