இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி மறைவு: முதல்வர் இரங்கல்

இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி மறைவு: முதல்வர் இரங்கல்
Updated on
1 min read

சென்னை: இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "அஞ்சலை பொன்னுசாமி அம்மாவின் தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங்கும்" என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "1943-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 'இந்திய தேசிய இராணுவத்தில்' (INA) ஜான்சி ராணி படைப்பிரிவில் இணைந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய வீரமங்கையான அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் (102 வயது) நேற்று முன்தினம் மலேசியாவின் செந்துல் நகரில் காலமானார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் பிறக்காவிட்டாலும், வாழாவிட்டாலும் 21 வயதே ஆன நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையில் சேர்ந்து கடும் நெருக்கடி மிகுந்த சூழல்களில் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர் அஞ்சலை பொன்னுசாமி அம்மாள். இந்தியா, மலேசியா இரு நாடுகளும் முறையே 1947 மற்றும் 1957 ஆண்டுகளில் விடுதலை பெற்றதைக் கண்டு மகிழ்ந்து நிறைவாழ்வு வாழ்ந்து அவர் விடைபெற்றிருக்கிறார்.

வீரம், மனவுறுதி, துணிச்சல் ஆகிய பண்புகளால் பெண்குலத்துக்கே சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கிய அஞ்சலை பொன்னுசாமி அம்மாளின் தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங்கும்" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in