Last Updated : 12 May, 2016 02:30 PM

 

Published : 12 May 2016 02:30 PM
Last Updated : 12 May 2016 02:30 PM

யூடியூப் பகிர்வு: ஆர்ஜே பாலாஜி இப்படிக் கலாய்த்தல் தகுமா?

தேர்தலுக்குத் தேர்தல் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துகொண்டே போகிறது. தேர்தல் குறித்த அடிப்படை செய்திகள் அவர்களின் எண்ணங்களில் எந்த அளவுக்கு படிந்திருக்கிறது?

வழக்கமான வாக்கு வங்கிகளைத் தவிர்த்து வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் காரணிகள் அவர்கள். ஓரளவுக்காவது அடிப்படை அரசியல் செய்திகளை தெரிந்துவைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

நாள் முழுக்க செல்போனை நோண்டிக்கொண்டிருக்கும் அவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்பது நாகரிகம் இல்லைதான். ஆனால் தன்னைச் சுற்றிலும் இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்ற கவலையே இல்லாமல் இருப்பவர்களை அப்படியே விட்டுவிட முடியாதல்லவா?

நாட்டில் யாருமே சரியில்லை என்று சொல்வதற்கு, நாம் கொஞ்சமேனும் சரியாக இருக்கவேண்டும்.

எப்.எம். ரேடியோவில் நமக்கு பழக்கமான குரல் ஆர்ஜே பாலாஜியுடையது. நாட்டு நடப்புகளை விளாசுவதாகட்டும், செலிபிரிட்டிகளை சிலாகிப்பதாகட்டும் மின்னலைகளில் தனி கலாய்ப்பைப் பாய்ச்சியவர் பாலாஜி.

'தமிழ்நாடு ஜீரோ பர்சன்ட்' என்ற இந்தக் காணொளிப் பதிவிலும் இளையத் தலைமுறையிடையே உள்ள தனது செல்வாக்கை மிகவும் நேர்மறையாக பயன்படுத்தியிருக்கிறார்.

மாதிரிக்கு சில கல்லூரி மாணவ மாணவிகளை அழைத்துள்ளார். அவர்களிடம் தேர்தல் குறித்த மிக சாதாரண செய்திகளைக் கேட்டுப் பார்த்தார். பல கேள்விகளுக்கு வேண்டாம், சில கேள்விகளுக்காவது அவர்கள் பதில் என்ன?

சில மாதங்களுக்குள் வேறு மாற்றிக் கொள்ளப்போகிற ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவதற்கே எவ்வளவு மெமரி, என்ன டிஸைன், கேமராவுல ப்ளாஷ் இருக்கிறதா அப்புறம் என்னென்ன ஆப்ஸ் இருக்கிறது என்றெல்லாம் ஒன்றுக்கு பலமுறை பலரையும் விசாரித்து அதைப் பற்றி எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்கிறோம்.

நம் தொகுதியின் பிரதிநிதியாக ஐந்துஆண்டுகள் பணியாற்றப் போகிற ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கும்போது, அவர் என்ன கட்சி? நல்லவரா? கெட்டவரா? அவரைப் பற்றி நமக்கு என்னென்ன தெரியும் என்ற குறைந்தபட்ச தேடலாவது நமக்கு இருக்கவேண்டாமா? அவர் கேட்பது நியாயம்தானே?

இந்த வீடியோ பதிவைப் பார்த்து முடித்த பிறகு, நம் இளையத் தலைமுறை மீது உங்களுக்கு கடுப்பு ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் அது தவறு. சமகால அடிப்படை அரசியலைக் கூட அவர்கள் தெரிந்துகொள்ளாத அளவுக்கு அவர்களை எந்திரங்களாக வளர்க்கும் மூத்த தலைமுறைகளைத்தான் நாம் குறை சொல்ல வேண்டும்.

பொறுமை இழக்காமல் இந்தக் காணொளியைப் பாருங்கள். நம் அருமை மாணவச் செல்வங்களில் ஒருவராவது தன் பொறுப்பை புரிந்துகொண்டுவிட்டால், தொண்டைக்கிழிய அவர்களுக்கு உணரவைக்க முயன்ற பாலாஜிக்கு அதுவே வெற்றி.