பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருதுகளையும் இளையராஜா பெற வேண்டும்: அன்புமணி வாழ்த்து

இசைஞானி இளையராஜா | கோப்புப் படம்
இசைஞானி இளையராஜா | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருதுகளையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்தை கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "முத்து விழா ஆண்டில், 80வது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசை சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

இசைஞானியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். தாயின் தாலாட்டில் மயங்கி கண்ணுறங்கியது நான்கு ஆண்டுகள் என்றால் இந்த ஞானியின் தாளங்களில் மயங்கி கண்ணுறங்கிய காலம் நாற்பதாண்டுகளுக்கும் அதிகம். எனது மகிழ்விலும், கவலையிலும் இசையாய் இளையராஜா என்னுடன் இருப்பார்.

மனக்காயங்களுக்கு இசை மருந்து போடுவதால் அவரும் ஒரு மருத்துவர். பயணத்தில் துணை வருவதால் அவர் இனிய வழித் தோழர். எவராலும் வெறுக்க முடியாத எல்லோராலும் நேசிக்க முடிந்த மனிதர்களில் முதலாமவர் இளையராஜா. அவரது இசை சேவை தொடர வேண்டும்.

இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம்; அது வெகு விரைவில் நிறைவேற வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in