திருவண்ணாமலை கிரிவலப்பாதை பகுதியில் கருணாநிதி சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதை பகுதியில் கருணாநிதி சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையில் கிரிவலப் பாதை மற்றும் மாநில நெடுஞ்சாலை இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கியுள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் குமரன் நிர்வகிக்கும் ஜீவா கல்வி அறக்கட்டளைக்கு, வருவாய் துறையினர் முறைகேடாக பட்டா வழங்கியுள்ளனர். ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகில் உள்ள நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமித்து அப்பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைக்க திட்டமிட்டுள்ளது.

கிரிவலப் பாதையில் கருணாநிதியின் சிலை அமைத்தால் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அப்பகுதியில் கால்வாய் உள்ளதால் அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர்போக்குவரத்துக்கும் இடையூறாகஅமையும். எனவே, அப்பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைக்க தடை விதிக்க வேண்டும், என அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. மேலும், அந்த இடத்தில் சிலை அமைக்க இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த தடையை நீக்கக்கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது ஷபீக் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜீவா கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழக அரசுத்தரப்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள அந்தநிலம் பட்டா நிலம் என்றும்,அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது தவறு என்றும், வேளச்சேரியைச் சேர்ந்த மனுதாரர் எந்த விவரங்களையும் தெரிவிக்காமல் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், சிலை அமைக்கவுள்ள நிலம் தனியார் பட்டா நிலம் ஆவணங்களில் உள்ளது எனக்கூறி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in