

சென்னை: தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு பரிசீலனையில், திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தமிழகத்தில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதி முடிகிறது. இதையடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மே 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, மே 31-ம் தேதிமுடிவடைந்தது.
திமுக சார்பில் எஸ்.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், ராஜேஸ்குமார் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்ஆகியோரும் வேட்புமனு தாக்கல்செய்தனர். இதுதுவிர, பத்மராஜன், அக்னி ராமச்சந்திரன், மன்மதன், சுந்தரமூர்த்தி, கந்தசாமி, வேல்முருகன் சோழகனார், தேவராஜன் ஆகிய 7 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 13 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவைச் செயலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் தலைமையில் மனுக்கள் பரிசீலனை தொடங்கியது .
வேட்புமனுவுடன், பிரமாணப் பத்திரம், வைப்புத்தொகை, 10 சட்டப்பேரவை உறுப்பினர்களின் முன்மொழிவுக் கடிதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவற்றின் அடிப்படையில் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில், திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.கல்யாணசுந்தரம், ஆர்.கிரிராஜன், ராஜேஷ்குமார், அதிமுக சார்பில் போட்டியிடும் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று (ஜூன் 2) கடைசி நாளாகும். தற்போது 6 இடங்களுக்கு, 6 பேர் மட்டுமே மனுக்களை தாக்கல் செய்துள்ளதால், இன்று மாலையே அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.