

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று முன்தினம் பாஜகவினர் திரண்டனர்.
பின்னர், தலைமைச் செயலகம் நோக்கி அனைவரும் பேரணியாக புறப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
பாஜகவினரின் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும், சென்னையில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 4 ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல், 144 தடை உத்தரவை மீறுதல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், கரு.நாகராஜன், நயினார்நாகேந்திரன் உட்பட 10 நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டு வழக்கு பதிந்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.