

கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 400 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா என்ற ஆர்.கிருஷ்ணன், சி.ஆர்.ராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ‘‘முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி, அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் ஒரு மாதம் முழுவதும் 400 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், கழகக் கொடியேற்று விழா, நலத் திட்ட உதவிகள், ரத்ததான முகாம், மருத்துவ முகாம்கள், மரக்கன்று நடுதல் ஆகியவற்றை நடத்துவது, ‘திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கத்தை 10 இடங்களில் நடத்துவது’’ ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்மொழிந்தார். மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.