

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி நிருபர்களிடம் நேற்று கூறியது:
திமுக - அதிமுகவுக்கு மாற்றாக உருவாகியுள்ள மக்கள் நலக் கூட்டணிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் இலவசங்களை கொடுத்து மக்களை அப்படியே வைத்திருக்க திமுக - அதிமுக அரசுகள் முடிவெடுத்து விட்டன. அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வர் என்பதை மறந்து மகாராணி போல வாழ்ந்து வருகிறார். மக்களையும் சந்திப்பதில்லை. அவர்களுடைய குறைகளையும் தீர்த்து வைப்பதில்லை. திமுக தலைவர் கருணாநிதி ஒய்வெடுக்க வேண்டும். மாறாக அரசியலில் ஈடுபடக் கூடாது.
முல்லை பெரியாறு அணை கேரளாவில் உள்ளது. பயன்பெறுவோர் தமிழத்தில் உள்ளனர். எனவே, இரண்டு மாநிலத்துக்கும் தோல்வி ஏற்படாமல், சமரசத் தீர்வுகாண வேண்டும். கடந்த பிஹார் மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என ஊடகத்தினர் தெரிவித்தனர். ஆனால், அங்கு நிதிஷ்குமார் கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல, தமிழ்நாட்டிலும் கருத்துக் கணிப்புகள் தவிடுபொடியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.எஸ்.மாசிலாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.