

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நாளை (ஜூன் 3) முதல் 5-ம் தேதி வரை சென்னை கலைவாணர் அரங்கில் தோட்டக்கலைத் துறை சார்பில் மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தோட்டக்கலைத் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் முதல் முறையாக மலர்க் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலர்க் கண்காட்சி நாளை (ஜூன் 3) தொடங்கி 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மலர் அலங்காரம், காய்கறியில் செய்யப்பட்ட உருவங்கள், மலர் வளைவுகள், தொட்டிகளில் வண்ண மலர்கள், மலர்களால் ஆன கோப்பை உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெறும். மலர்க் கண்காட்சியை செல்ஃபி எடுப்பதற்கு பிரத்யேக இடமும் அமைக்கப்படுகிறது.
பொதுமக்கள் அனுப்பியுள்ள சிறந்த புகைப்படங்களும் மலர்க் கண்காட்சியில் வைக்கப்படவுள்ளது. மலர்க் கண்காட்சிக்காக கலைவாணர் அரங்கம் விழாக் கோலம் பூண்டுள்ளது. இவ்வாறு தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.