

கோடைவிடுமுறை முடிவுறும் தருவாயில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தவார இறுதியில் கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் கொடைக்கான லையும் விட்டு வைக்கவில்லை. தரைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் காரணமாக மலைப்பகுதிக்கு சென்றவர்கள் கொடைக்கானலின் குளுமையை அனுபவிக்க முடியவில்லை. இந்நிலையில், கோடைமழை தொடர்ந்து பெய்தததால் தற்போது இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. அவ்வப்போது மேகக்கூட்டங்கள் சுற்றுலா பயணிகளை தழுவிச் செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஜூன் முதல் வாரம் பள்ளிகள் தொடங்கிவிடும் என்பதால் குடும்பத்துடன் கொடைக்கானலின் குளுமையை அனுபவிக்க வருகை தந்துள்ளவர்கள் அதிகம். இந்நிலையில், தேர்தல் காரணமாக கோடைவிழா தாமதமானதால் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை காண முடியாமல் திரும்பிச்செல்கின்றனர். வழக்க மாக 10 நாட்கள் நடைபெறும் கோடைவிழா, இந்த ஆண்டு தேர்தல் காரணமாக குறைந்த நாட்களே நடைபெறும் நிலை உள்ளது. கோடைவிழாவின் முக்கிய அம்சமாக மலர் கண்காட்சி இடம்பெறும். இருநாள் நடைபெறும் மலர் கண்காட்சியை காண தமிழகமெங்கும் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வந்து ரசிப்பர். இந்த ஆண்டு மலர் கண்காட்சி தமிழக அமைச்சரவை பதவியேற்பால் தள்ளிப்போகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: மே 28, 29-ம் தேதிகளில் மலர் கண்காட்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யும்படி தோட்டக்கலைத் துறையினருக்கு உத்தரவுகள் வந்துள்ளன. இதை யடுத்து பணிகளை தொடங்கி உள்ளனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதால், அதிகளவில் சுற்றுலாபயணிகள் வருகை தருவர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நாட்களை விட்டால், பள்ளி தொடங்கிவிடும். சுற்றுலா பயணி கள் வருகை குறைந்துவிடும். மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக விலங்கின் உருவம் ஒன்றை மலர்களை கொண்டு அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. புதிதாக பொறுப்பேற்க உள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மலர் கண்காட்சி தொடக்கவிழாவில் பங்கேற்க உள்ளனர் என்றார்.