Last Updated : 08 May, 2016 01:19 PM

 

Published : 08 May 2016 01:19 PM
Last Updated : 08 May 2016 01:19 PM

பணம் கொடுத்து கிராம மக்களை திரட்டும் கட்சிகள்: சுட்டெரிக்கும் வெயிலில் அவதியுறும் பெண்கள், குழந்தைகள்

அக்னி வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சித் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், நடிகர், நடிகைகள், மாநிலப் பேச்சாளர்கள் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது பிரச்சாரத்துக்கு கூட்டத்தைச் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள், இடைத்தரகர்கள் மூலம் கிராமங்களில் இருந்து ஆண்களையும், பெண்களையும் அழைத்து வருகின்றனர்.

கடும் வெயிலில் கட்சியினர் தரும் பணத்துக்காக கால் கடுக்க நிற்கும் அவல நிலைக்கு ஏழை எளிய கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

முன்பெல்லாம் தலைவர்கள் பிரச்சாரத்தைக் கேட்க தன்னெழுச்சியாக மக்கள் கூட்டம் அலைபாயும். அவ்வாறு தங்கள் சொந்த காசை செலவு செய்து தலைவர்கள் பேசுவதைக் கேட்க தொண்டர்கள் திரண்ட காலம் தற்போது மலையேறிவிட்டது. வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை. மாலை, இரவு வேளைகளில் வேடிக்கை பார்க்க சிலர் வருகிறார்கள்.

அதோடு, வீட்டுக்குள் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து நேரலையாக தலைவர்கள் பிரச்சாரத்தைப் பார்க்க முடிவதால், பலரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்குச் செல்ல விரும்புவதில்லை.

கூட்டம் சேர்க்கும் கட்சிகள்

இச்சூழ்நிலையில் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் அந்தந்த பகுதிகளில் பிரச்சாரத்துக்கு வரும்போது கொடி பிடிக்கவும், கைதட்டவும் தொண்டர்கள் மட்டுமின்றி, கட்சி சாராதவர்களையும் அழைத்து வரவேண்டிய கட்டாயம் கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதிலும் தேசிய, மாநில தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வரும்போது அதிக கூட்டத்தை காட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது.

இதனால் இடைத்தரகர்கள் மூலம் கிராமப் பெண்களை குறிப்பாக முதியவர்களை பிரச்சாரக் கூட்டங்களுக்கு முக்கிய கட்சிகள் அழைத்து வருகின்றன. தலைக்கு இவ்வளவு என்று இடைத்தரகர்களிடம் ஒரு தொகையை பேசி கிராமங்களில் வேலையில்லாமலும், வீடுகளிலும் இருக்கும் பெண்களையும், ஆண்களையும் கூட்டத்துக்காக கட்சியினர் அழைத்து வருகின்றனர்.

பணம் படுத்தும் பாடு

வேட்பாளர்களுடன் கட்சிக் கொடிகளை பிடித்துக்கொண்டு தெருத்தெருவாக காலை 7 மணி முதல் 10 மணிவரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கிராம மக்கள் செல்கிறார்கள். இவர்களில் ஆண்களுக்கு ரூ.150 முதல் ரூ.200 வரையிலும், அவர்களில் தேவைப்படுவோருக்கு மதுபாட்டில்களும், பெண்களுக்கு ரூ.300 வரையிலும் வழங்கப்படுகிறது.

வீட்டில் சும்மாவே இருப்பதற்கு தேர்தல் பிரச்சாரங்களுக்குச் சென்றால் நாள்தோறும் காசு கிடைக்கும் என்று ஆசையைத் தூண்டி இடைத்தரகர்கள் ஆள் பிடிக்கின்றனர்.

சில இடங்களில் இடைத்தரகர்களாக அந்தந்த கட்சி நிர்வாகிகளே செயல்படுகின்றனர். வேட்பாளர்கள் அல்லது கட்சி மாவட்ட நிர்வாகிகளிடம் பணம் பெறும் இந்த இடைத்தரகர்கள், அதை கூட்டத்தில் பங்கேற்போருக்கு முழுமையாக தராமல், பாதியை சுருட்டிவிடுவதாகவும் புகார்கள் வருகின்றன.

அவதியுறும் மக்கள்

திருநெல்வேலியில் தற்போது வேட்பாளர்களுடன், அல்லது நட்சத்திர பேச்சாளர்களுடன் காலையும் மாலையும் இரவிலும் கூட்டமாக கொடிபிடித்துச் செல்லும் பெண்கள் சிலர் தங்கள் கைகளில் குழந்தைகளுடனும் செல்வதைப் பார்க்க முடிகிறது.

கடும் வெயிலில் செருப்பு இல்லாமலும், குடிக்க தண்ணீர் இல்லாமலும் பெண்கள் பலரும் அவதியுறுகிறார்கள். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்கூட கட்சிக் கொடிகளை பிடித்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரக் களங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பில் அக்கறை செலுத்தும் அரசுத் துறைகள் இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்றே தெரியவில்லை.

சிறுவர், சிறுமிகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என்ற நடத்தை விதிமுறை உள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் அதை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x