Published : 01 Jun 2022 02:41 PM
Last Updated : 01 Jun 2022 02:41 PM

தமிழகத்தில் 8,023 பேருக்கு 4-வது நிலை யானைக்கால் நோய் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 8,023 பேருக்கு 4-வது நிலை யானைக்கால் நோய் பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிமணியன் தெரிவித்துள்ளார்.

யானைக்கால் நோய் நிலை 4-ல் உள்ள நோயாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டதிற்கான சான்றிதழ், மருத்துவப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் அரிசி, பருப்பு ஆகியவற்றை இன்று தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: "யானைக்கால் நோய் ஆரம்பத்தில் காய்ச்சல், நெரிகட்டுதல், கைக்கால் வலி, தோல் சிவந்து காணப்படுதல், தோல் தடித்து காணப்படுதல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். நோய் முற்றும்போது கால்களில் வீக்கம் (யானைக்கால்), விரைவீக்கம், கைகள் மற்றும் மார்பகங்களில் வீக்கம் போன்றவை ஏற்படும்.

இந்தத் தாக்கங்களுக்கு ஏற்ப யானைக்கால் நோய் 4 நிலைகளில் அழைக்கப்பட்டு வருகிறது. யானைக்கால் நோயின் தாக்கம் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் காணப்பட்டது. யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டம் 1957-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 44 இரவு நேர ரத்தப் பரிசோதனை மையங்களும், 25 யானைக்கால் நோய் கட்டுப்பாட்டு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் ஆங்காங்கே பொது மக்களுக்கு இரவு நேர ரத்தத் தடவல் பரிசோதனை மற்றும் கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யானைக்கால் நோயை ஒழிக்கும் பொருட்டு ஒட்டு மொத்த டிஇசி மாத்திரை வழங்கும் திட்டம் 1998 முதல் 2014 வரை 2 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவருக்கும் வருடம் தோறும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளால் இந்நோய் தற்பொழுது பரவக்கூடிய நிலையில் இல்லை என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு செல்கிறது.

தற்பொழுது யானைக்கால் நோய் முற்றிலும் ஒழிப்பு என்ற இலக்கினை நோக்கி சென்றபோதிலும், ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு யானைக்கால் நோய் நிலை 4-இல் தமிழகத்தில் 8,023 நபர்கள் தற்போது பாதிப்பில் உள்ளனர். நிலை 4-ல் உள்ளவர்களுக்கு கால் வீக்கம், தோலில் புண்கள் மற்றும் நீர்வடிதல் ஆகியவை காணப்படும்.

இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் உதவித்தொகையாக மாதம் ரூபாய்.1000/- மற்றும் யானைக்கால் பராமரிப்பு உபகரணங்கள் 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் யானைக்கால் நோய் பாதித்தவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 வங்கிக் கணக்கிலேயே மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மூலமாக செலுத்தப்படுகிறது.

மேலும், கால்களில் உள்ள புண்கள் பராமரிப்பதற்காக பிளாஸ்டிக் பேசின், குவளை, ஸ்டூல், சோப்புப்பெட்டி, சோப்பு, துண்டு மற்றும் மாத்திரைகள், களிம்புகள் வழங்கப்படுகின்றன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்நோயாளிகளுக்கு தன் சுத்தம் பற்றியும் கால்களை பராமரிக்கவும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x