Published : 01 Jun 2022 04:43 AM
Last Updated : 01 Jun 2022 04:43 AM

கலாமின் கொள்கைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும் - அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய விண்வெளி விஞ்ஞானிகள் கருத்து

சென்னை: ‘‘அப்துல் கலாமை கொண்டாடுவதோடு அவரது கொள்கைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும்’’ என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில் விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மூத்த விஞ்ஞானியும் சத்தீஸ்கர் அமிட்டி பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் வி.செல்வமூர்த்தி, ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர். அப்போது அவர்கள் பேசியதாவது:

மூத்த விஞ்ஞானி டாக்டர் வி.செல்வமூர்த்தி: 25 ஆண்டுகாலம், கலாம் என்கிறஆளுமையோடு பழகுவதற்கும், இணைந்து பணியாற்றுவதற்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். 35 ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தியன் சயின்ஸ் காங்கிரஸில்தான் நான் முதன்முதலாக கலாமை சந்தித்தேன். அதில் நானும் கட்டுரை வாசிக்கச் சென்றிருந்தேன். அங்கு நான் கலாமை சந்தித்ததுமே அவரது ரசிகனாகி விட்டதோடு, அவருடனான அன்புப் பிணைப்பும் முதல் சந்திப்பிலேயே உண்டாகிவிட்டது.

பொதுவாக டிஆர்டிஓ என்றாலோ, கலாம் என்றாலோ ஏவுகணைகள் பற்றியே முதலில் பலரும் நினைப்பார்கள். இரண்டாவதாக, ஏர்கிராப்ட், ரேடார்ஸ், சோலார்ஸ் ஆகியன நினைவுக்கு வரும். ஆனால் டிஆர்டிஓ-வில் முக்கியமானது ‘லைஃப் கிவ்விங் சயின்ஸ்’ என்று கலாம் சொல்வார். குளிரிலும், மலைகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு உதவியாகவும், அவர்கள் சிக்கலின்றி பணியாற்றிட பயனளிக்கும் வகையில் செயலாற்றுவதும் டிஆர்டிஓ-வின் பணியாகும். 2டிஜி எனப்படும் கரோனா எதிர்ப்பு தடுப்பு மருந்தும் டிஆர்டிஓ-வின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். எந்தக் கண்டுபிடிப்பும் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டுமென்பதில் கலாம் மிகவும்உறுதியாக இருப்பார். அதைச் செயல்படுத்தியும் காட்டினார். கலாமை கொண்டாடுவதோடு அவரது கொள்கைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும்.

ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு: எதையும் புதுமையாகவும் மக்களுக்கான பயன்பாட்டோடும் செய்ய வேண்டுமென்பதில் பெருவிருப்பம் கொண்டவர் கலாம். அடிவாரத்திலிருந்து மலையின் உச்சிக்கு உணவு கொண்டு செல்வதற்கு அதிக செலவானது. அதைக் குறைக்கும் வகையில் மலை உச்சியிலேயே விவசாயம் செய்ய முடியும் என்கிற முயற்சியில் இறங்கி, நவீன வேளாண் தொழில்நுட்பங்களை உருவாக்கி, அங்கேயே காய்கறிகளைப் பயிரிட்டு, உற்பத்தி செய்து, அதை போர்முனையிலிருந்து ஏர்முனைக்கு மாற்றிடும் தொழில்நுட்ப பணியை அப்துல் கலாம் தலைமையிலான குழு சிறப்பாகச் செயல்படுத்தியது.

அதேபோல் உடனடி சமையல் செய்து சாப்பிடும் வகையில் ஒரு வருடத்துக்கு கெட்டுப்போகாத வகையில் அறிவியல் முறையில் பதப்படுத்தி, பிறகு சூடுபடுத்தி சாப்பிடும் வகையில் ‘விஞ்ஞான சமையல்’ என்று சொல்லும் உணவு தொழில்நுட்பத்தைத் தந்ததும் மிகச் சிறப்பான செயலாகும்.

டிஆர்டிஓ நிறுவனத்தில் போர் தொழில்நுட்பம் தவிர்த்து, உப தொழில்நுட்பங்கள் சார்ந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் சமுதாயம் சார்ந்த நன்மைகளுடன் முன்னெடுக்கப்பட்டன. இந்தியாவில் சுனாமி, சூறாவளி, பூகம்பம் போன்ற பேரிடர் நிகழ்வுகளின்போது, ராணுவ தொழில்நுட்பங்களும் அறிவியலாளர்களும் அந்தந்தப் பகுதிகளுக்கே நேரடியாகச் சென்று, மீட்புப்பணியில் ஈடுபட்டு, மக்களை அந்தப் பேரழிவுகளில் இருந்து மீட்க வேண்டும் என்பதில் பேராவலோடு சிந்தித்தவர் அப்துல் கலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடைகளை அனுப்பும் 25 பார்வையாளர்களுக்கு ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://www.htamil.org/00640 என்ற லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x