Published : 01 Jun 2022 07:00 AM
Last Updated : 01 Jun 2022 07:00 AM

மற்றவர்களை தரமின்றி விமர்சனம் செய்ய சிவாஜி பெயரைப் பயன்படுத்த வேண்டாம்: இரா.முத்தரசனுக்கு ராம்குமார் வேண்டுகோள்

சென்னை: பிறரை தரமின்றி விமர்சிப்பதற்கு, நடிகர் சிவாஜியின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசனுக்கு, சிவாஜியின் மகன் ராம்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன்,பிரதமர் மோடியை விமர்சிக்கும்போது, தேவையின்றி தந்தை சிவாஜியின் பெயரை இழுத்திருக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசன், பிரதமர் மோடி ஆகியோர், இடைவிடாத மற்றும்அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால்உயர்ந்த இடத்தை அடைந்திருக் கிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுடன், எங்கள் தந்தைநட்புடன் இருந்தவர். நெருக்கடியான காலங்களில், அவர்களுக்கு உதவியவர். தனது உடல், பொருள்,புகழ் ஆகிய வற்றை, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லா மல் நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.

நேர்மை, திறமை, கடின உழைப்பு காரணமாக, அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது. பல விருதுகளும் கிடைத்தன. எனவே, அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

சிவாஜி இன்று இருந்திருந்தால், பிரதமர் மோடியையும், பாஜகவையும் ஆதரித்திருப்பார். உலக அரங்கில் மோடியால் பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்திருப்பார்.

பாரத நாட்டின் மண் சார்ந்த கொள்கைகளை பிரதமர் கடைப்பிடித்து வருகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், இதே பாணியைப்பின்பற்றி வெற்றி நடைபோடுகிறார். இடது, வலது என எந்தப்பக்கமும் திரும்பாமல், நேர்கொண்ட பார்வையில் எங்கள் தலைவர்களின் பயணம் தொடர்கிறது.

உங்களுடைய கருத்தில், இந்திய மற்றும் உலகப் பொருளாதாரம் குறித்த அறியாமை தெரிகிறது. பாஜக அளித்ததாக நீங்கள் குறிப்பிட்ட வாக்குறுதியை நம்பி, மக்கள் கடன் வாங்கவில்லை. உங்கள் கூட்டணிக் கட்சியான திமுக அளித்த வாக்குறுதிதான் மக்களை கடன் வாங்க வைத்தது. இவையெல்லாம் பொதுவெளியில் இருக்கும் தகவல்கள். “Little knowledge is dangerous” என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அரைகுறை ஞானம் ஆபத்தானது என்பதை உங்கள் அறிக்கை நிரூபிக்கிறது.

சிவாஜி கணேசனைப் பாராட்டுவதை வரவேற்கிறோம். ஆனால், பிறரைத் தரமின்றி விமர்சிப்பதற்கு அவரது பெயரைப் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x