Published : 01 Jun 2022 07:07 AM
Last Updated : 01 Jun 2022 07:07 AM
சென்னை: தமிழகத்தில் 60 வயது நிறைவடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட 18 ஆயிரம் பேர் நேற்றுடன் ஓய்வு பெற்றனர்.
தமிழகத்தில் 2020 வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 58-ஆக இருந்தது. கரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், அரசுக்கு அதிக நிதி தேவைப்பட்டது.
இதனால், 2020-ல் ஓய்வு பெறவிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பணப் பயன்களை வழங்க முடியாத சூழல் உருவானது. இதையடுத்து, ஓய்வுபெறும் வயது 59-ஆகவும், 2021-ல் 60-ஆகவும் உயர்த்தப்பட்டது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, அகவிலைப்படியும், ஈட்டிய விடுப்பு ஊதியமும் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் தமிழக அரசு ஊழியர்களுககு வழங்கப்பட்டபோதும், ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தம் தொடர்கிறது.
இந்நிலையில், 2020-ல் 58 வயதை எட்டிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்போது 60 வயதை அடைந்ததால் நேற்றுடன் ஓய்வு பெற்றனர்.
தலைமைச் செயலகத்தில் 49 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 5,286 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வாரியங்கள், கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 18 ஆயிரம் பேர் நேற்று ஓய்வு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT