

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலில் நேற்று முன்தினம் இறப்பு சான்றிதழ் ஒன்றை கண்டெடுத்த ரயில்வே பணியாளர்கள், அதனை மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேலாளர் பிரசன்னாவிடம் ஒப்படைத்தனர். அது, கோவை ரங்கராஜபுரத்தை சேர்ந்த ரங்கம்மாள் என்பவருக்கான இறப்பு சான்றிதழ் என்பதும், 1999-ம் ஆண்டு மே 18-ம் தேதி உயிரிழந்தவருக்கு, அதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1990-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதியிட்டு அந்த சான்றிதழ் கோவை மாநகராட்சியால் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சான்றிதழை உரியவர்களிடம் சேர்ப்பதற்காக நண்பர்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரசன்னா தகவலை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், உரிமையாளர் சார்பில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்த தன்னார்வ அமைப்பினர், உரிய விளக்கம் அளித்து, சான்றிதழை பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து, ரயில் நிலைய மேலாளர் பிரசன்னாவிடம் கேட்டபோது, “சான்றிதழின் உரிமையாளர் சார்பில் இ-சேவா என்ற தன்னார்வ அமைப்பினர் வந்து உரிய விளக்கம் அளித்தனர். அந்த சான்றிதழில் தேதி குளறுபடி இருப்பது குறித்து கேட்டபோது, சான்றிதழ் வழங்கப்பட்டபோது தேதி தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை திருத்தி வழங்கவே உரிமையாளர் சார்பில் மாநகராட்சிக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தனர். முறைப்படி கடிதம் பெற்று, புகைப்படம் எடுக்கப்பட்டு, சான்றிதழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சான்றிதழ் வழங்கும்போது தவறுதலாக தேதியை மாற்றி பதிவிட்டிருக்கலாம். அதோடு, அந்த சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முழு விவரங்களையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.