Published : 01 Jun 2022 06:26 AM
Last Updated : 01 Jun 2022 06:26 AM
கோவை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய அகில இந்திய குடிமைப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், கோவை காட்டூரைச் சேர்ந்த சந்திரசேகர் - முத்துலட்சுமி தம்பதியின் மகளான ரம்யா (30) அகில இந்திய அளவில் 46-வது இடத்தையும், மாநில அளவில் 2-வது இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக ரம்யா கூறும்போது,‘‘நான் பள்ளிப் படிப்பை கோவை சபர்பன் மெட்ரிக் பள்ளியில் படித்தேன். சிஐடி கல்லூரியில் மின்னியல் பிரிவில் பொறியியல் படித்துள்ளேன். 6-வது முறையாக இத் தேர்வை எழுதியுள்ளேன். முதல் 5 முறை தேர்வு எழுதியபோது, ஒரு முறை கூட முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றதில்லை. இருப்பினும், எனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து படித்தேன். தற்போது முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 46-வது இடத்தை பிடித்துள்ளேன். குடிமைப் பணித்தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி பெற்றேன். கோவை மத்திய நூலகம் மற்றும் அம்மா ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்ற இலவச பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற்றுள்ளேன். தொடர்ந்து முயற்சி செய்து படித்தால் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெறலாம்,’’ என்றார்.
அதேபோல, கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கமலேஸ்வர் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 297-வது இடத்தைபிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். தனது மூன்றாவது முயற்சியில் குடிமைப் பணித் தேர்வில் கமலேஸ்வர் வெற்றி பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT