Published : 01 Jun 2022 06:40 AM
Last Updated : 01 Jun 2022 06:40 AM
உதகை: உதகை அருகே கேத்தி கிராமத்தில் வசிக்கும் படகர் சமுதாயத்தை சேர்ந்த மீரா என்பவர் கப்பல் படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கேத்தி கிராமத்திலுள்ள அச்சனக்கல் பகுதியைச் சேர்ந்தரவீந்திரநாத், மாலதி தம்பதியின் மகள் மீரா (23). ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக, நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனை மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் ரவீந்திரநாத் பணியாற்றியுள்ளார்.
பணி மாறுதலாகி செல்லும் இடங்களுக்கு மகள் மீராவையும் அழைத்துச்சென்று, அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்க வைத்துள்ளார். கோவையில் ரவீந்திரநாத் பணிபுரிந்தபோது, அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மீராவை சேர்த்தார்.
இந்திய ராணுவத்தில் சேர்ந்துபணிபுரிய மீராவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த ராணுவப் பணிக்கான தேர்வு எழுதினார். அதில், கப்பல் படைக்கான பிரிவில் மீரா தேர்ச்சி பெற்றார்.
இதைத்தொடர்ந்து, கேரள மாநிலம் கண்ணூர் அருகே எஜிமாலா கப்பல் படைத்தளத்தில் மீராவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 6 மாதங்கள் பயிற்சி முடிவடைந்த நிலையில், விரைவில் கப்பல் படைக்கு அதிகாரியாக தலைமை ஏற்க உள்ளார். இந்நிலையில் பெற்றோருடன் சொந்த ஊரான உதகை அடுத்த அச்சனக்கல்லுக்கு வந்த மீராவுக்கு, ஊர் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு சார்பிலும் பாராட்டு விழா நடைபெற்றது.
இதுகுறித்து மீரா கூறும்போது, ‘‘தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால், எனக்கும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கேற்ப கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தியை முதன்மை மொழியாக கொண்டு படித்ததால், எனக்கான பயிற்சிகள் எளிமையாக இருந்தன.
தற்போது கண்ணூரில் உள்ள தேசிய கப்பல் படை பயிற்சி மையத்தில் 6 மாத பயிற்சியை முடித்துள்ளேன். இதைத்தொடர்ந்து சப்-லெப்டினென்ட் என்ற கப்பல் படை அதிகாரி பதவி வழங்கப்பட்டு, கொச்சியில் உள்ள கப்பல்படை தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT