Published : 01 Jun 2022 06:51 AM
Last Updated : 01 Jun 2022 06:51 AM
சேலம்: எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 முறை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மருத்துவமனைக்கு சீல் வைத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
எடப்பாடி அடுத்த ஜலகண்டாபுரம் சவுரியூரைச் சேர்ந்தவர் பூபதி (31). இவரது மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு 11 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் சங்கீதா எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தார்.
வீடு திரும்பிய சங்கீதாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கடந்த 29-ம் தேதி மீண்டும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர் வயிற்றில் ரத்தம் கட்டி உள்ளதாக கூறி, இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை நடந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சங்கீதாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும், மருத்துவமனையின் கதவு கண்ணாடி மற்றும் கணினி உள்ளிட்டவைகளை சேதப்படுத் தினர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கைது செய்யக்கோரி வெள்ளாண்டி வலசு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற எடப்பாடி வட்டாட்சியர் லெனின், துணை வட்டாட்சியர் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் பாபு, கொங்கணாபுரம் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து சங்கீதாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தவர்களை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT