Published : 01 Jun 2022 07:29 AM
Last Updated : 01 Jun 2022 07:29 AM
திருவள்ளூர்: சித்தூர்- தச்சூர் 6 வழிச் சாலை திட்டத்தை மாற்று வழிகளில் செயல்படுத்தக் கோரி நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 43 கிராம விவசாயிகள் தங்கள் வீடு உள்ளிட்டவைகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றினர்.
பிற மாநிலங்களில் இருந்து,சென்னை-எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி தனியார் துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாக வருவதற்காக பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஆந்திர மாநிலம்-சித்தூர் முதல், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் வரை 126.550 கி.மீ., தூரத்துக்கும் பெங்களூரு- சென்னை அதிவேக நெடுஞ்சாலை (6 வழிச்சாலை) அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஆந்திராவில் 75 கி.மீ., தமிழகத்தில் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வட்டங்களில் 51.550 கி.மீ., தூரம் அமைய உள்ள, என்எச் 716 பி என்ற இச்சாலை, ரூ.3,197 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இச்சாலைக்காக ஆந்திராவில் 2,186 ஏக்கர், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 889 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முப்போகம் விளையக் கூடிய விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் சித்தூர்- தச்சூர் 6 வழிச் சாலை திட்டத்தை மாற்று வழிகளில் மத்திய அரசுசெயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் கறுப்பு கொடிகளை ஏற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பள்ளிப்பட்டு வட்டத்துக்குட்பட்ட புண்ணியம், சொராக்காப்பேட்டை, குமாரராஜபேட்டை, சாணார் குப்பம், ஊத்துக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட தண்டலம், தொளவேடு உள்ளிட்ட 43 கிராமங்களில் உள்ள வீடுகள், கடைகள், நிலங்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றினர்.
விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், ஊத்துக்கோட்டை வட்ட நஞ்சை நில விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT