Published : 01 Jun 2022 06:12 AM
Last Updated : 01 Jun 2022 06:12 AM
புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுவையில் ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர் ணயிக்கப்படுகிறது.
2022-23-ம் ஆண்டுக்கான உத்தேசமின் கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பலரும் இக்கூட்டத்தில் மின்கட் டணத்தை உயர்த்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு மற்றும் தனியார் நிலுவையில் வைத்துள்ள பல கோடி மின்கட்டண பாக்கியை வசூலிக்கவும் கோரினர். கரோனாவில் இருந்து தற்போது தான் மீண்டு வந்திருக்கும் சூழலில் கட்டண உயர்வு மேலும் நெருக்கடியைத் தரும்என்று இக்கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட உத்தேச கட்டணமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறிவிக்கப்பட்டது. சில பிரிவுகளில் கட்டணத்தை உயர்த்தியும் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வீட்டு உபயோக மின்கட்டணம் உயர்ந்துள்ளது. 100 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் 35 பைசா உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101ல் இருந்து 200 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் 30 பைசா உயர்ந்து ரூ.2.90 ஆகவும் உயர்ந்துள்ளது. 201 முதல் 300 யூனிட்டுக்குள் ஒரு யூனிட் ரூ. 4.65 ஆக கட்டணம் 35 பைசா உயர்ந்து ரூ. 5 ஆகவும், 300 யூனிட்டு மேல் ஒரு யூனிட் ரூ. 6.05 ஆக கட்டணம் 40 பைசா உயர்ந்து ரூ. 6.45 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் கமர்சியல் சர்வீஸ் கட்டணம் 1 முதல் 100 யூனிட் வரைஒரு யூனிட் ரூ. 5.70 ஆகவும், 101 முதல்250 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.75 ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ. 7.50 ஆகவும் அதிகரித்துள்ளது.
தற்போது ஏப்ரல் மாத பயன்பாட்டு பில்கள் பயனாளிகளுக்கு தரப்பட்டுள் ளன. அதில் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதை விசாரித்தபோது, தற்போது கட்டண உயர்வுடன் 1,000 வாட்ஸுக்கு ரூ. 30 கட்டணம் கூடுதலாக வீடுகளுக்கு வசூலிக்கப்படுகிறது. அதேபோல் கமர்சியல் சர்வீஸில் உள்ளோருக்கு 1,000 வாட்ஸுக்கு நிலையான கட்டணமாக ரூ. 75 வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாகும் சூழலில், கட்டணம் இன்னும் பல மடங்கு கடுமையாக உயரும் என்று தெரிவிக்கின்றன. இதுபற்றி நுகர்வோர் கூறுகையில், "எத்தனை வாட்ஸ் பயன்படுத்துகிறோமோ அதன் அடிப்படையில் நிலையான கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் மின்கட்டணத்துடன் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது" என்று குற்றம் சாட்டினர்.
இதுபற்றி மின்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் மின்கட்டணம் அரசு நிர்ணயிப்பதில்லை. இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்படிதான் நிர்ணயிக்கப்படுகிறது. " என்று குறிப்பிட்டார். ‘மின்துறை தனியார்மயமானால் இன்னும் மின்கட்டணம் உயருமே- தனியார் மயமாக்க ஒப்புதல் தந்துள்ளீர்களா?’ என்று கேட்டதற்கு, "கருத்து சொல்ல விரும்பவில்லை" என்ற பதிலையே குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT