

புதுச்சேரி வளர்ச்சிக்கான விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் தராத முதல்வர் ஜெயலலிதா துரோகியா - நான் துரோகியா என்று முதல்வர் ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் தலைவரான முதல்வர் ரங்கசாமி நேற்று கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலில் வழிபட்டுவிட்டு, காலாப்பட்டு தொகுதிக்கு நேற்று மதியம் சென்றார். சென்டிமென்ட்படி கடந்த முறை பிரச்சாரத்தை தொடங்கிய கனகசெட்டிக்குளம் சுந்தரமூர்த்தி வினாயகர் ஆலயத்தில் வழிபட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஊழலற்ற ஆட்சி, வெளிப்படையான நிர்வாகம், புதுச்சேரி வளர்ச்சி ஆகிய மூன்றும்தான் எங்கள் கொள்கை. இதை இந்த மண்ணில் தொடங்கிய கட்சியால்தான் கொடுக்க முடியும். இந்த முறை யாரிடமும் கூட்டணி வைக்கவில்லை, மக்களுடன்தான் இந்தமுறை கூட்டணி. நடைபெற உள்ள தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கும் என நம்புகிறேன். அப்போதுதான் புதுச்சேரிக்கு பயனாக இருக்கும்.
கடந்த மாநிலங்களவை தேர்த லில் பணம் வாங்கிக்கொண்டு சில எம்எல்ஏக்கள் பேரம் பேசினர். 3 எம்எல்ஏக்கள் நினைத்தால் ஆட்சி கவிழுமா? எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆட்சியை காப் பாற்ற வேண்டும் என்பதற்காக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வேறு கட்சிக்கு (அதிமுகவுக்கு) வழங்கினோம்.
விமான ஓடுதளம் விரிவாக்கத் துக்கு 5 ஆண்டுகளாக தமிழகத் திடமிருந்து நிலம் கேட்டு வருகி றோம். ஆனால் ஜெயலலிதா தரவில்லை. நிலம் கொடுத்தால் புதுச்சேரி வளர்ந்துவிடும் என்று அவர் நினைக்கிறார். ஜெயலலிதா துரோகியா- நான் துரோகியா? 'எனக்கு வாக்களித்தால் தற்கொலைக்கு சமம்' என்று ஜெயலலிதா என்ன அர்த்தத்தில் சொன்னார் என தெரியவில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்.
புதிய தொழிற்சாலை வர காங்கிரஸ் அனுமதி தரவில்லை. பாஜகவும் தரவில்லை. அக்கட்சிகள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தும் தரவில்லை. கடனை தள்ளுபடி செய்யவும் இல்லை. இவர்கள் எப்படி மாநிலத்தை நல்ல வளர்ச்சிக்கு கொண்டு வருவார்கள்?
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.